சென்னை, ஜன.31- "கோட்சே இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கோட்சேயின் தத்துவமான இந்துத்துவா இன்றும் இருக்கிறது - எச்சரிக்கையாக இருந்து முறியடிக்கவேண்டும்.!" என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னைப் பெரியார் திடலில் மாணவர் இந்தியா எனும் அமைப்பில் நேற்று (30.1.2014) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் வரைந்த கருத்தோவியம் வருமாறு:
1. காந்தியார் சுடப்பட்டது ஏன்?
காந்தியார் சுடப்பட்டது ஏன்? என்பது பற்றி தந்தை பெரியார் தனது நாட்குறிப்பிலே குறித்து வைத்திருந்தார். அது இதோ:
இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947 இல்; காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல். காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல். அதாவது அவர் நம் நாடு மத சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளது மிகவும் முக்கியமானது.
(ராமராஜ்ஜியம் அமைக்கப் போகிறேன் என்று சொன்னபோது காந்தியாரை மகான் ஆக்கினார்கள். நான் சொன்ன ராமன் வேறு; இராமாயண ராமன் வேறு என்று சொன்னபோது, அவரை துர்ஆத்மா ஆக்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை).
2. காந்தியாருக்குப் பார்ப்பனர்கள் மீது ஏன் கோபம்?
சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) இருந்தார். பொது வாழ்க்கையில் மிகவும் தூய்மையானவர்; பக்த சிரோன்மணிதான்; மாதம் தவறாமல் திருவண்ணாமலை ரமண ரிஷியைத் தரிசிப்பவர்தான். அவரிடம் சமூக நீதிப் பார்வை இருந்தது. முழுக்க முழுக்கப் பார்ப்பனர்கள் - கல்வி, உத்தியோகங்களைத் தாங்களே அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இதனால் பார்ப்பனர்களுக்கு ஆத்திரம்; விளைவு காந்தியாரிடம் காவடி எடுத்தார்கள். ஓமந்தூர் ராமசாமி தாடியில்லாத ராமசாமி நாயக்கர் என்று புகார் சொன்னார்கள்; எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர் அல்லாதாருக்குத்தான் கொடுக்கிறார். பார்ப்பனர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்று குற்றப்பத்திரிகை படித்தார்கள். காந்தியார் அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
அதற்குப்பின் முதலமைச்சர் ஓமந்தூரார் காந்தியாரைச் சந்தித்து உண்மை விவரங்களைக் கூறினார். பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேல் எத்தனைப் பங்கு அனுபவிக்கிறார்கள் என்பதையும் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார். காந்தியாருக்கு உண்மை நிலவரம் புரிந்துவிட்டது.
அதற்குப்பின் தங்களைச் சந்திக்க வந்த பார்ப்பனர்களிடம் சொன்னார், உங்கள் பங்குக்குமேல் அதிகம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுக் கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்
பார்ப்பனர்களைப் பார்த்து, பிராமணர்களுக்குத் தர்மம் வேதம் ஓதுவதுதானே? உங்களுக்கு ஏன் பிணம் அறுக்கும் டாக்டர் வேலை? உங்களுக்கு ஏன் டி ஸ்கொயர்? போய் உங்கள் வருணத் தொழிலைச் செய்யுங்கள் என்று காந்தி யார் கூறியதுதான் தாமதம், பார்ப்பனர்கள் ஒரு புள்ளி வைத்துவிட்டனர் அப்பொழுதே!
சரி இனிமேல் காந்தி நமக்குச் சரி வரமாட்டார். அவர் செல்வாக்குப் பார்ப்பனர்களுக்கு இனிப் பயன்படப் போவதில்லை என்று தீர்க்கமாக முடிவு செய்து, காந்தியாரை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு கட்டிவிட்டனர்.
3. வானொலியில் என்ன பேசினார் பெரியார்?
உலக மக்கள் எல்லோராலுமே போற்றப்படும் பெரியார் காந்தியார் முடிவெய்திய சேதியானது எல்லா மக்களுக்குமே துக்கத்தைக் கொடுக்கக் கூடிய சேதியாகும். இவரது முடிவு இந்த நாட்டுக்கு பரிகரிக்க முடியாத நஷ்டம் என்பதோடு, இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர் மறைய நேரிட்டது எந்த விதத்திலும் சகிக்க முடியாத சம்பவம். அவர் உலகத்தில் உயிர் வாழும் பிரபலஸ்தரான மாபெரும் பெரியார்கள் வரிசையில் ஒரு பெரியாராய் இருந்தார். அவரைப் போல் பொதுத் தொண்டையே தனது வாழ்நாள் தொண்டாகக் கொண்டவர்களையும், தனக்கென எதுவுமே இன்றி ஒரு லட்சியத்திற்கே வாழ்ந்து வந்தவர்களையும் காண்பது மிகவும் அரிதான காரியமாகும். தென் ஆப்பிரிக்காவில் அவர் பெற்ற வெற்றியே இந்திய மக்களின் மதிப்பையும், பின்பற்றுதலையும் அவருக்கு வலியக் கிடைக்கச் செய்தது.
கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒரே லட்சியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பதும், அதில் ஏற்படும் எப்படிப்பட்ட கஷ்ட நஷ்டங்களையும், வெற்றி தோல்விகளையும் லட்சியம் செய்யாமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், எப்படி நினைப்பார்கள் என்பதைப்பற்றியும் கவலை இல்லாமல் தொண்டாற்றுவது என்பதும் எல்லோராலும் ஆகும் காரியம் அல்ல. இப்படிப்பட்ட ஒருவருக்கு இந்தக் கோரமான முடிவு ஏற்பட்டது. இந்த நாட்டின் மதிப்பைக் கெடுக்கக்கூடியதும், இயற்கைக்கு விரோதமானதுமான வாய்ப்பு என்பதில் சிறிதும் அய்யமில்லை. அதிலும் காந்தியார் யாருக்காக, எந்த மக்களுக்காக உயிர் வாழ்ந்தாரோ, அல்லும் பகலும் இடையின்றி பாடுபட் டாரோ, அவர்களாலேயே இந்த முடிவு ஏற்பட்டதென்றால், இது வெகுவெகு வெறுக்கத்தக்க காரியம். இவ்விழிதரமான காரியத்துக்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருத முடியவில்லை.
பொதுவாகவே இந்நாட்டில் பொது ஒழுக்கம் மோசமான தன்மை அடைந்து விட்டதை இச்சம்பவம் காட்டுகிறது. ஒரு நாகரிக நாட்டில் இப்படிப்பட்டவருக்கு இந்த மாதிரி சம்பவம் ஏற்படுவதென்பது சிறிதும் ஏற்க முடியாத காரியமாகும்.
எனவே, இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப்பினை மூலமாவது இந்த நாட்டில் அரசியலின் பேராலும், மத இயலின் பேராலும், இன இயலின் பேராலும் கருத்து வேற்றுமைக்காக கலவரங்களும், கேடுகளும், நாசங்களும் மூட நம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லாமல் அறிவுடைமையோடும் வாழுபவர்களாக மக்கள் நடந்து கொள்வார்களேயானால் அதுவே பரிதாபகரமானதும், வெறுக்கத்தக்கதுமான முடிவை எய்திய அப்பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும், நன்றியறிதலுமாகும். திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப் பட்ட நிலையிலும் அமைதியுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்பது எனது விண்ணப்பம்.
(நெருக்கடியும், பதற்றமும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் தந்தை பெரியார் எவ்வளவுப் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொண்டுள்ளார் என்பதைக் கவனிக்கவேண்டும்).
காந்தியாரைச் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று பரப்பிவிட்டார்கள். இதன் காரணமாக நாட்டின் பல பாகங்களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் மூண்டன. வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் தந்தை பெரியாரின் வானொலி உரை அமைதியை ஏற்படுத்தியது. வட மாநிலத்தில் குறிப்பாக பம்பாயில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். தீ வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொரார்ஜி தேசாய் தனது வாழ்க்கை வரலாறு நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
4. பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?
காந்தியாரை பார்ப்பன சக்திகள், இந்துத்துவா வெறியர்கள் கொன்றது ஒரு திட்டமிட்ட சதியின் அடிப்படையில் தான். கோட்சேயின் பின்னணியில் இருந்தவர் வி.டி.சவர்க்கார்தான்.
இதுபற்றி காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் ஏ.காந்தி என்பவர் ‘‘Let’s Kill Gandhi’’
என்ற நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
அதில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார் காந்தியாரைக் கொன்றவர்கள் பார்ப்பனர்கள் என்று.
இந்து மகாசபையிலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பார்ப்பனர்களே நிறைந்திருந்தனர். அவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். வகுப்புகளற்ற, ஜாதியில்லாத ஓர் இந்தியச் சமுதாயத்தை உருவாக்குவதற்காக காந்தியார் ஓர் இயக்கத்தைத் தொடங்கியமைக்காகப் பார்ப்பனர்கள் அவர்மீது கடுஞ்சினம் கொண்டிருந்தனர். காந்தியார் விடுதலை பெற்ற கீழ்ஜாதி மக்களின் புத்தெழுச்சியும், அவர்களது ஜனநாயக உரிமைகளைப் பற்றிய அவர்களது புரிதலும் ஆங்கிலேய ஆட்சியில் ஆட்சித் துறையிலும், நீதித் துறையிலும் நீக்கமற நிறைந்து இவற்றைத் தங்களின் தனி உடைமையாக்கி வைத்திருந்த உயர்ஜாதியினரின் குறிப்பாகப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தன. 1947-க்கு முன்பு இந்தியாவில் ஒரே ஒரு பார்ப்பன அரசுதான் இருந்தது. மராட்டியத்தில் பூனாவைச் சேர்ந்த பேஷ்வாக்களின் மராத்தா பேரரசு மட்டும்தான் பார்ப்பன அரசாக இருந்தது. பூணூல் பார்ப்பனர்கள் பிரிட்டானியாவில் இந்தியாவை விட்டு வெளியேறிய அடுத்த நொடியே இந்த நிலத்தின் ஆட்சி அதிகாரம் மீண்டும் தங்கள் கைகளிலேயே வந்து விழும் என்று எப்போதும் கருதிக் கொண்டிருந்தார்கள். பேஷ்வா (பார்ப்பனர்) மரபினரின் இந்தக் கனவு காந்தியாரால் தகர்த்தெறியப்பட்டு விட்டது என்று காந்தியாரின் பேரன் எழுதியுள்ளார்.
மற்றொரு தகவலையும் காந்தியாரின் பெயரன் துசார் காந்தி தம் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையைப் பற்றியது அது. இதோ காந்தியாரின் பெயரன் எழுதுகிறார்:
கோட்சேயின் அறிக்கை உறுதியாக அவனால் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் மொழி ஆளுமையை அவன் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. அந்த அறிக்கை இளகிய மனம் கொண்டவர்களையும் உணர்ச்சிவயப்படச் செய்து மாற்றும் வகையில் மிகத் திறமையாக எழுதப்பட்டிருக்கிறது. சதிகாரர்களில் ஒருவரான வி.டி.சவர்க்கார்தான் அந்த அறிக்கையினை உருவாக்கியவர். அவர் அனல் வீசும் எழுத்தாளர். இணையற்ற பேச்சாளர். அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட காலத்திலும், விசாரணையின்போதும் கோட்சே சவர்க்காரோடு மிக நெருங்கிய உறவாடினான். கோட்சேயின் பெயரில் வெளியான அந்த அறிக்கையில் சவர்க்கார் எழுதுகோலின் உயிர்த் துடிப்பைக் காண முடிந்தது என்று காந்தியாரின் கொள்ளுப் பெயரன் எழுதியுள்ளார்.
உண்மையில் இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிச் சொன்னவர்தான் இந்த சவர்க்கார் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது என்று முதலில் பிரிவினையை உருவாக்கியதே சவர்க்காரே தவிர முஸ்லிம்கள் அல்ல. ஆனால், முஸ்லிம்கள் தான் பிரிவினைவாதிகள், இந்தியாவைத் துண்டாடிவிட்டனர் என்று பழிபோடுவதும் இந்த இந்துத்துவா பார்ப்பனர் கூட்டம்தான்.
தேசியம் என்று சொல்லி அதன் பலாபலன் முழுவதையும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்களே!
முதல் இந்தியர் நீதிபதி யார் என்றால் முத்துசாமி அய்யர்தான். முதல் துணை வேந்தர் யாரென்றால் சுப்பிரமணிய அய்யர்தான்.
திராவிடர் கழகக் கூட்டங்களில் எல்லாம் அப்பொழுது சொல்லப்படுவது மூன்று பி (‘B’ )க்கள்.
பிரிட்டீஷ், பிராமின், பனியா இந்த மூன்றும்தான்.
அந்த ‘B’ கள்! அதில் ஒன்று தொலைந்தது. இன்று மீதி இரண்டும் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருக்கின்றன.
5. தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை எதுவாக இருந்தது?
தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை தனி மனிதர்மீது பகையல்ல - தத்துவத்தின் மீதுதான் பகை! காந்தியாரைப் படுகொலை செய்தபோது தந்தை பெரியார் தூண்டிவிட்டிருந்தால், இங்கு என்னவெல்லாம் நடந்திருக்கும் . மகா ராட்டிரத்தில் பார்ப்பனர்கள் தாக்கப் பட்டதுபோல இங்கு நடக்காமல் தடுக்கப்பட்டு விட்டதே!
கோட்சே என்பவன் ஒரு துப்பாக்கி - துப்பாக்கி ஒரு கருவிதானே தவிர, மூலமல்ல. அதனை இயக்கும் சக்தி எது? தத்துவம் எது? நம் கோபம் அதன்மீது தான் திரும்பவேண்டும்; அதனைக் கண்டு பிடித்து அறிவித்தவர்தான் தந்தை பெரியார்.
என் மதம், என் ஜாதி என்பதுதான் ஹிந்துத்துவா என்பது. எல்லார்க்கும் எல்லாம் என்பது தான் தந்தை பெரியார் தத்துவம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே வித்தியாசம் இல்லாமல் தான் பழகி வருகிறோம். மார்க்கத்தால் முஸ்லிம்கள் என்றாலும், இனத்தால் திராவிடர்களே. அண்ணன், தம்பிகளாக, மாமன் மச்சானாக ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும் பண்பாடு இங்கு - இதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் தானே! மறுக்க முடியுமா? (பலத்த கைதட்டல்)!
இளைஞர்களின் கடமை என்ன?
கோட்சே இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம்; அந்தக் கோட்சேயிசம் என்பது வேறு ஒன்றும் இல்லை. இந்துயிசம் தான். அதன் ஒரு வடிவம்தான் நரேந்திர மோடி.
அவர்தான் பிரதமராக வேண்டுமாம்; காரணம் அவர் குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்துவிட்டாராம்.
உண்மையிலே அது ஒரு திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரமே!
மேற்கு வங்காளத்தில் மம்தா விரட்டினால் டாட்டாவுக்குப் புகலிடம் குஜராத்தில்தான். ஏழை - எளிய மக்களை விரட்டி விட்டு நிலங்கள் எல்லாம் தாரை வார்க்கப்படுகின்றன.
வளர்ச்சி என்றால் யாருக்கு வளர்ச்சி? மேல்தட்டு மக்களுக்குத்தானே அங்கு வளர்ச்சி.
பணக்காரர்கள் பார்ப்பனர்கள் இவர்கள்தானே மோடியின் பின்புலமாக பலமாக இருக்கிறார்கள். அடையாளம் காண வேண்டாமா?
நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் பிரச்சார வாகனமாக மாற வேண்டும். அவர்கள் முகநூலில் புகுந்து விளையாடுகிறார்கள் என்றால், அதற்கு மேலும் நாம் செல்லவேண்டும் - அவர்களின் அகநூல் வரை ஆராய்ந்து வெளிப்படுத்தவேண்டும்.
பயங்கரவாதிகள் என்றால் ஒரு தொப்பி, ஒரு குறுந்தாடி என்று சித்தரிக்கிறார்கள். நாம் திருப்பிப் பதிலடி கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகள் என்றால் ஒரு உச்சிக்குடுமி ஒரு பூணூல், ஒரு காவி என்று அடையாளப்படுத்தவேண்டும்.
அவர்கள் பாசிசத்தைப் பரப்பக் கூடியவர்கள். நாமோ பகுத்தறிவை, சமூகநீதியை, சமத்துவத்தை, சமதர்மத்தை எடுத்து முன்வைக்கவேண்டும்.
மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்கும் நமது முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.
காந்தியார் எதற்காகப் பலியானார்? அவரைக் கொன்றொழித்த கூட்டம் எது? சக்தி எது? அதன் கொள்கை என்ன? என்று பிரச்சாரப் பீரங்கியாய் முழங்கிட வேண்டும்.
- சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை மாணவர் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை (30.1.2014).
நன்றி:
No comments:
Post a Comment