ஏ.பாக்கியம்
தேச விரோதிகள் தங்களை தேச பக்தர்கள் என நாமகரணம் சூட்டிக் கொண்டு, தேச பக்தர்களை வேட்டையாடும் அசிங்கங்களை அரங்கேற்றுகின்றனர்.
மதச்சார்பற்ற சக்திகள் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள்..
ஹிட்லரை பகிரங்கமாக புகழ்ந்தவர்கள். சிறுபான்மையினரை அழிக்க ஹிட்லரின் வழி தான் இந்தியாவிற்கு பொருந்தும் என்று மார்தட்டியவர்கள்…
தங்களது முக்கிய எதிரிகள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் என பகிரங்கமாக அறிவித்தவர்கள்…
1947 -இந்தியா விடுதலை பெற்ற போது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக் கொடியை ஏற்றியவர்கள்.
தேசத் தந்தையை படுகொலை செய்ததுடன், இனிப்புவழங்கி கொண்டாடியவர்கள்.
1950களில் இந்திய அரசமைப்பு சட்டத்தை எதிர்த்து விஷம் கக்கினர். மனுஸ்மிருதியை புகழ்ந்து எழுதினர்.
இந்து ஆண்களுக்குரிய உரிமை பெண்களுக்கும் பொருந்தும் என சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து செயல்பட்டவர்கள்.
1956-ல் அம்பேத்கர் சாதிய அடக்கு முறைக்கு எதிராக புத்தமதத்தை தழுவிய போது கடுமையாக எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்கள்.
தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் அரணாக இருக்கின்ற அரசியல் சட்ட பிரிவு 370ஐ எதிர்த்து வருகிறவர்கள்.
‘கணவன்‘ சடலத்துடன் மனைவியை உயிருடன் வைத்து எரித்துக் கொல்லும் ‘சதி’ எனும் படுபாதகச் செயலை 1987-ல் இராஜஸ்தானில் ஆதரித்து புகழ்ந்து பேசியவர்கள் கோவில் கட்டியவர்கள்.
தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசி வருபவர்கள். ஒழித்துக் கட்ட உறங்காது உழைப்பவர்கள்.
1992-ல் பாபர் மசூதியை இடித்தவர்கள். இந்து முஸ்லீம் பகைமைத் தீயை நாடு முழுவதும் எரிய விட்டவர்கள்.
பூர்வகுடி மக்களின் கல்வி, மருத்துவத் தேவைகளுக்கு உதவி செய்த கிறிஸ்தவர்களை உயிருடன் கொளுத்தியவர்கள்
அணுகுண்டுக்கு கோவில்கட்டி, அதை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவோம் என போதனை செய்து வருபவர்கள்.
தேர்தல் ஆதாயத்திற்காக குஜராத் துவங்கி முசாபர் நகர் வரை வகுப்புக் கலவரங்களை எரிய விட்டு எண்ணற்ற உயிர்ப்பலி கொடுத்தவர்கள். வகுப்புக் கலவரங்கள் காளான்கள் போல் வளர வழி வகுத்தவர்கள்.
கோவா, தானே, மாலேகான், சம்ஜவுதா ரயில், மெக்கா மஸ்ஜித் என பல இடங்களில் காவித் தீவிரவாதம் மூலமாக குண்டுவெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர் மீது பழி போட நினைத்தவர்கள். இதை அம்பலப்படுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே படுகொலைக்கு பக்க பலமாக இருந்தவர்கள்.
2013-ல் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, நரேந்திர தபோல்கர் என புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர்களை படுகொலை செய்தவர்கள்.
மாட்டுக்கறி பெயரால் மனிதப் படுகொலை செய்பவர்கள்.
தங்களது காவி பயங்கரவாதச் செயல்களை தற்போது சென்னை ஐஐடி துவங்கி, ஹைதராபாத், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களில் செயல்படும் மாணவ அமைப்புகளுக்கு எதிராக இறக்கி உள்ளனர்.
மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள், ஜனநாயக வாதிகள், காந்தியவாதிகள், இடதுசாரிகள், தலித் அமைப்புகள், அம்பேத்கர் பெயரால் இயங்கும் அமைப்புகள் என அனைத்துக்கும் தேச விரோத முத்திரை குத்தி வேட்டையாடத் தொடங்கிவிட்டனர்.
சுதந்திரச் சந்தை மூலமாக இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகுவைத்துவிட்டு, இயற்கை வளங்களை கிழக்கிந்தியக் கம்பெனிகளின் புதிய அவதாரமான பன்னாட்டுக் கம்பெனிகளிடம் அடகு வைத்துவிட்டு, மத்திய காலச் சிந்தனையான பிற்போக்குத் தனத்தை மீட்டெடுக்க நினைக்கும் இவர்கள் தேசபக்த வேடம் பூண்டு வருகின்றனர்.
கூலிகேட்டால், குடிநீர் கேட்டால், குடியிருப்புக் கேட்டால், விலை உயர்வுக்கு எதிராகப் போராடினால், ஜனநாயக உரிமை கேட்டால் இனி மேல் தேசவிரோத முத்திரை குத்தப்படும். இதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் நியதி. மீண்டும் சாதிய வர்ணாசிரம கட்டமைப்புக்குள் இந்திய சமூகத்தை கட்டமைக்கத் துடிக்கும் இந்த மக்கள் விரோதிகள், எல்லா மக்களுக்கும், எல்லா தேசத்திற்கும் எதிரானவர்கள். அவர்களின் “போலி தேச பக்த பதாகை” மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
நன்றி:
No comments:
Post a Comment