Friday, 12 February 2016

26/11 தாக்குதல், விடை தேடும் வினாக்கள்






– ரியாஸ்

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏழு வருடங்கள் ஆகின்றன. 26/11 தாக்குதல் என்று பிரபல்யமாக அழைக்கப்படும் இந்த தாக்குதலில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன. அதில் முக்கியமானது அப்போதைய மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் மரணம். வந்த தீவிரவாதிகளில் ஒருவனை தவிர மற்ற ஒன்பது பேரும் கொல்லப்பட்டதாக உளவுத்துறையும் காவல்துறையும் கூறின. அந்த ஒருவனான அஜ்மல் கசாபையும் அவசரமாகவும் ரகசியமாகவும் நவம்பர் 2012ல் தூக்கில் இட்டு புதைத்தனர். எஞ்சிய மர்ம முடிச்சுகளும் அஜ்மலுடன் சேர்த்து புதைக்கப்பட்டன.

இந்த தாக்குதல் நடைபெற்ற பிறகு வேகமாக, ஆனால் சில காலம் மட்டுமே, உச்சரிக்கப்பட்ட மற்றொரு பெயர் டேவிட் கோல்மன் ஹெட்லி. இரட்டை ஏஜெண்ட் என்று அழைக்கப்பட்ட ஹெட்லி மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என்று கூறப்பட்டார். அமெரிக்க பிரஜையான ஹெட்லியை அமெரிக்க அரசாங்கம் கைது செய்தபோதும் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தியாவும் அதற்கான வலுவான கோரிக்கையை வைக்க வில்லை. தேச பாதுகாப்பை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல் பேசி வரும் பா.ஜ.க.வின் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது ஹெட்லி குறித்து ஏதேனும் வாய் திறப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. விதவிதமான ஆடைகளுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு பங்கை கூட ஹெட்லி விவகாரத்தில் இவர் கொடுக்க வில்லை.

எட்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இந்த சம்பவம் பலரின் நினைவை விட்டும் அகன்றுவிட்டது. நவம்பர் 26 அன்று மட்டும் இதனை நினைவு கூறும் சம்பிரதாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் வேட்கை ஒரு சிலருக்குத்தான் உள்ளது. அவர்கள்தான் இதனை குறித்து பேசியும் எழுதியும் வருகின்றனர். அவர்களில் ஒருவர் மஹாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிஃப்.

மும்பை தாக்குதல் குறித்தான நியாயமான சந்தேகங்களை கொண்ட இவர் அதனை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார். கர்கரேயை கொன்றது யார்? என்ற அந்த புத்தகம் 2009ல் வெளிவந்து பல மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டு பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. (இலக்கியச்சோலை வெளியீட்டகம் தமிழில் இதனை வெளியிட்டுள்ளது). அந்த புத்தகத்தின் சாராம்சம் இதுதான். நவம்பர் 26, 2008 அன்று மும்பை நகரை ஒருபுறம் பாகிஸ்தானின் லஷ்கர்இதய்பா தீவிரவாதிகள் தாக்கிக் கொண்டிருக்க, மறுபுறம் உள்ளூர் தீவிரவாதிகள் தங்கள் பங்கிற்கு தாக்குதலை நடத்தினர். இவர்களின் இலக்கு தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே. அகண்ட இந்து பாரதத்தை அமைக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்று செயல்பட்டு வரும் அபிநவ் பாரத் இயக்கத்தை சார்ந்தவர்கள் உளவுத்துறை மற்றும் மும்பை காவல்துறையை சார்ந்த சில கருப்பு ஆடுகளின் துணையுடன் இந்த தாக்குதலை நடத்தினர் என்று அந்த புத்தகத்தில் முஷ்ரிஃப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையை முற்றிலுமாக சீர்குலைக்க ‘தேசிய பாதுகாப்பு’ என்ற போர்வைக்குள் புகுந்து பல உண்மைகளை உளவுத்துறை மறைத்ததாகவும் இவர் குற்றம்சாட்டினார். குற்றப்பத்திரிகையில் காவல்துறையினர் கூறியதை வலுவான ஆதாரங்களுடன் இவர் மறுத்துள்ளார். அவற்றுள் முக்கியமான சில விஷயங்கள்.

குற்றப்பத்திரிகை கூற்றுகள்

* பாகிஸ்தானில் இருந்து வந்த பத்து தீவிரவாதிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து ஹோட்டல் ஓபராய், ஹோட்டல் தாஜ், நரிமன் ஹவுஸ், லியோபால்ட் கஃபே, சி.எஸ்.டி. ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

* சி.எஸ்.டி.யில் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் மற்றும் இஸ்மாயில் கான் ஆகிய இருவரும் அங்கிருந்து காமா மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ரங்பவன் லேனிற்கு வந்து காவல்துறை வாகனத்தில் வந்த ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே மற்றும் விஜய் சலாஸ்கர் ஆகிய மூன்று முக்கிய காவல்துறை அதிகாரிகளையும் கொலை செய்தனர்.

* அவர்களின் உடல்களை வெளியே வீசிவிட்டு அந்த வாகனத்தை எடுத்து சென்றனர். செல்லும் வழியில் அதன் டயர் பஞ்சர் ஆனதால் வழியில் வந்த ஸ்கோடா வாகனத்தை கடத்தி அதில் தப்பி சென்றனர்.

* கிர்ஹம் சௌபாத்தி என்ற இடத்தில் வைத்து நடைபெற்ற என்கௌண்டரில் இஸ்மாயில் கான் கொல்லப்பட்டான். அஜ்மல் கசாப் கைது செய்யப்பட்டான்.

முஷ்ரிஃபின் வாதம்

* பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை எட்டு. அவர்களில் ஆறு பேர் ஹோட்டல் தாஜ், லியோபால்ட் கஃபே மற்றும் நரிமன் ஹவுசிற்கு சென்றனர். இருவர் ஹோட்டல் ஓபராய் மற்றும் ட்ரைடன்டிற்கு சென்றனர்.

* சி.எஸ்.டி., காமா மருத்துவமனை மற்றும் ரங்பவன் லேனில் தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் தீவிரவாதிகள். காமா மருத்துவமனை ஊழியர்களுடன் தீவிரவாதிகளில் ஒருவன் தெளிவான மராத்தியில் பேசியுள்ளான்.

* மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை மூலம் வெளியுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகள் சில உளவுத்துறை கருப்பு ஆடுகளுடன் சேர்ந்து இந்த திட்டத்தை நடத்தினர். இந்துத்துவ தீவிரவாதத்தை வெளியே கொண்டு வந்த ஹேமந்த் கர்கரேயை கொலை செய்ய சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த இவர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டனர்.

* நவம்பர் 19 அன்று அமெரிக்க உளவு ஏஜென்சி ஒன்று இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறையான ராவிற்கு ஒரு தகவலை கொடுத்தது. கராச்சியில் இருந்து லஷ்கர்இதய்பா தீவிரவாதிகள் மும்பையை தாக்குதவற்கு கிளம்பியுள்ளதாகவும் அவர்கள் உபயோகப்படுத்தவுள்ள 35 சிம் கார்ட்களின் எண்ணையும் கொடுத்தது. (இதில் மூன்று எண்களை அவர்கள் உபயோகப்படுத்தியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது). இந்த தகவலை ரா ( RAW) உள்நாட்டு உளவு அமைப்பான உளவுத்துறைக்கு (ஐ.பி.) கொடுத்தது. ஆனால், மும்பை காவல்துறைக்கோ கப்பற்படைக்கோ இந்த தகவலை உளவுத்துறை (ஐ.பி) வழங்கவில்லை.

* இந்துத்துவ தீவிரவாத முகாம்களில் பயிற்சி கொடுக்கப்பட்ட ஆறு முதல் எட்டு தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் தொடர்பு கொள்வதற்கான சிம் கார்ட்களும் கொடுக்கப்பட்டன. இந்த சிம்கள் மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் வாங்கப்பட்டன.

* சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் இவர்கள் நடத்திய கோர தாண்டவத்தில் 52 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களை வெறுக்க வேண்டும் என்பதை கற்று கொடுக்கப்பட்ட இவர்கள் தாங்கள் ஜிஹாதிய தீவிரவாதிகளின் வேடத்தை அணிந்துள்ளோம் என்பதை மறந்துவிட்டு முஸ்லிம்களை குறிவைத்தே அதிகமான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 22.

* ரயில் நிலையத்தில் இருந்து இவர்கள் தப்பி செல்லும் போது விட்டுச் சென்ற இரண்டு மொபைல் போன்கள் மற்றும் சில வெடி பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

* காமா மருத்துவமனைக்கு சென்ற ஒரு குழு அங்கு நீண்ட நேரம் தாக்குதலில் ஈடுபட்டது. மருத்துவமனைக்கு கீழே அதிக அளவில் காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் ஏன் உள்ளே செல்ல கட்டளையிடப்படவில்லை என்பது புதிராகவே உள்ளது.

* ரங்பவன் லேனில் உள்ள மற்றொரு குழு குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை கொடுத்த வண்ணம் இருந்தனர். காமா மருத்துவமனை இந்த லேனிற்கு மிக அருகிலேயே உள்ளது. இருந்தபோதும் அங்கிருந்த படைகள் இங்கும் அனுப்பப்படவில்லை.

* ரங்பவன் லேனில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று கொண்டிருக்கும் போது கூட இந்த 150 பேர் கொண்ட காவல்படை அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

* இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு பிரிவு அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தார். கர்கரே கொலை செய்யப்பட்ட பிறகுதான் அவர் அங்கிருந்து வெளியேறினார். அதுவரை அங்கு அவர் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

* ஸ்கோடா வாகனத்தில் சென்ற இரு தீவிரவாதிகளில் ஒருவனை கொலை செய்து விட்டு மற்றொருவனை கைது செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால், ஏதோ குளறுபடியில் இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

* இதன் பிறகுதான், தங்களின் கஸ்டடியில் இருந்த நபர்களில் ஒருவனான அஜ்மல் கசாபை சி.எஸ்.டி.க்கு அழைத்துச் சென்று சில புகைடப்படக்காரர்களை கொண்டு புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். பின்னர் நாயர் மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து, துப்பாக்கிச்சூடு காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

* இந்த உள்ளூர் தீவிரவாதிகளில் மற்றவர்கள் தங்களின் முகம் வெளியே தெரிந்து விடும் என்ற அச்சத்திலும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் பிரகாரமும் குண்டுவெடிப்பில் தற்கொலை செய்திருக்கலாம்.

* அன்றைய இரவு இந்த தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி சேனல்கள் தார்டியோ காவல்நிலைய காவல்துறையினர் இரண்டு தீவிரவாதிகளை கைது செய்ததாக செய்தி வெளியிட்டன. ஆனால், விரைவிலேயே இந்த செய்தி அகற்றப்பட்டது. இவர்களுக்கு என்ன நேர்ந்தது? உண்மையில் இவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், உளவுத்துறையை சார்ந்தவர்கள் இவர்களை தங்களின் இன்ஃபார்மர்கள் என்று கூறி அவர்களை விடுவித்திருக்க வேண்டும்.

புத்தகத்தில் தெளிவான குற்றச்சாட்டுகளை முஷ்ரிஃப் முன்வைத்த போதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆன பின்னரும் உளவுத்துறையை சார்ந்தவர்களோ இந்துத்துவ தலைவர்களோ இதற்கு எவ்வித பதிலையும் கொடுக்கவில்லை. இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் பொய் என்றாவது கூறியிருக்க வேண்டும். மான நஷ்ட வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால், இதில் எதையும் இவர்கள் செய்யவில்லை.

தனது முயற்சியின் அடுத்தக்கட்டமாக மற்றுமொரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார் முஷ்ரிஃப். இந்த புத்தகத்தில் மும்பை வழக்கு விசாரணையில் நீதித்துறையும் எவ்வாறு தோல்வியை தழுவியது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். 26/11 PROBE, WHY JUDICIARY ALSO FAILED? அந்த புத்தகத்தின் பெயர்.

இதனிடையே பீஹாரின் சோசியலிச தலைவரும் மூன்று முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ராதாகாந்த் யாதவ் ‘கர்கரேயை கொன்றது யார்?’ புத்தகத்தின் அடிப்படையிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் ஒரு கிரிமினல் ரிட் பெட்டிசனை ஜூலை 2010ல் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். விசாரணையில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகளை அதில் சுட்டிக்காட்டிய இவர் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதனை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மர்லபள்ளி மற்றும் அனூப் மேத்தா ஆகிய இருவரும் இந்திய அரசாங்கம், மஹாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை கமிஷ்னர் ஆகியோர் நான்கு வாரங்களில் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். செப்டம்பர் 28,2010 அன்று ஜோதி சூர்யகாந்த் பதேகர் மற்றும் சதீஷ் சாட்புட்டே ஆகிய இருவரும் இதே விஷயத்தை முன்வைத்து பொதுநல வழக்கை தாக்கல் செய்தனர். நவம்பர் 19,2010 அன்று இதற்கு பதிலளித்த மும்பை கமிஷ்னர் சஞ்சீவ் தயாள் ஒரு மேம்போக்கான பதிலையே கொடுத்தார்.

51 பக்கங்களை கொண்ட பெட்டிசனுக்கு இவர் வெறும் எட்டு பத்திகளில் பதில் கொடுத்தார். இந்த பதிலில் திருப்தியடையாத சாட்புட்டே, அபிநவ் பாரத்தின் தேச விரோத செயல்களையும் சிந்தனைகளையும் பட்டியலிட்டு கமிஷ்னர் அதனை மறைப்பதாக குற்றம்சாட்டி ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தார். கமிஷ்னரின் பதிலில் திருப்தியடையாத நீதிபதிகள், ‘என்ன நடந்தது என்பதை நாட்டின் மக்கள் அறிய வேண்டும். இந்திய அரசாங்கம் அல்லது மஹாராஷ்டிரா அரசு அதற்கான பதிலை வழங்க வேண்டும்’ என்று கூறினர். இந்த வழக்கில் நீதிபதி சில கேள்விகளையும் முன் வைத்தார்.

கர்கரேயின் மரணம் குறித்த சூழ்ச்சிகள் விசாரிக்கப்பட்டதா, கசாபின் கைது மற்றும் தண்டனையுடன் வழக்கு முடிவடைகிறதா, மராத்தி மொழி பேசக்கூடிய தீவிரவாதிகள் இருந்தனரா, இதுபோன்ற தாக்குதல்கள் இனி ஏற்படாமல் தடுக்க முடியுமா?, பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கும்போது தீவிரவாதிகளுக்கு 284 தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டது அதில் கசாப் மற்றும் இஸ்மாயிலுக்கு ஒரு அழைப்பு கூட செய்யப்படவில்லை என்பதும் உண்மையா ஆகிய கேள்விகள் அதில் முக்கியமானவை.

இந்த வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த நிலையில் ஜனவரி 21,2011 அன்று இந்த இரண்டு பொதுநல வழக்குகளையும் திடீரென்று முன்னர் தாக்கல் செய்யப்பட்ட ஆறு வழக்குகளுடன் இணைத்தனர். பிப்ரவரி 15 அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, முந்தைய ஆறு வழக்குகள் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்ற தடை இருப்பதாக கூறி இவற்றையும் ஜூலை 28,2011 வரை ஒத்தி வைத்தனர்.

ஆனால், இந்த முந்தைய ஆறு வழக்குகளுக்கும் தற்போதைய இந்த இரண்டு வழக்குகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. சம்பவம் நடைபெற்று எட்டு முதல் பத்து நாட்கள் கழிந்த நிலையில் அந்த ஆறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அப்போது முறையான விசாரணை ஆரம்பிக்கப்படவே இல்லை. அந்த ஆறு வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து, மும்பையின் பாதுகாப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய வழக்குகள் மும்பை தாக்குதல் விசாரணை குறித்து கேள்விகளை எழுப்பின. சம்பந்தம் இல்லாத இந்த வழக்குகளை உண்மையை மறைக்க வேண்டும் என்பதற்காகவே ஒன்றிணைத்து அவற்றை தள்ளிப்போட்டதாகவே தெரிகிறது.

தனது இரண்டாவது புத்தகத்தில் நீதிமன்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளையும் சந்தேகங்களையும் முன்வைக்கிறார் முஷ்ரிஃப். அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் இவர் பதிவு செய்துள்ளார். வழக்கின் தீர்ப்பை முழுமையாக படித்த பின்னரே தனது இந்த சந்தேகங்களை முன்வைப்பதாகவும் அவர் கூறுகிறார். முன்னர் தொடுக்கப்பட்ட கேள்விகளுடன் தற்போதைய இந்த கேள்விகளும் இணைந்து பதில்களை எதிர்பார்த்து நிற்கின்றன.

கார் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் யார்?

நவம்பர் 26 அன்று விலே பார்லே மற்றும் வாதி பந்தர் ஆகிய இடங்களில் டாக்சிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளில் தலா இரண்டு நபர்கள் இறந்ததாக காவல்துறை கூறியது. இறந்த நபர்கள் யார் என்பது தற்போதைய கேள்வி. இரண்டு டாக்சிகளிலும் டிரைவரும் மற்றும் ஒரு நபரும் இறந்ததாக கூறிய காவல்துறை அவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டியதாகவும் கூறியது. குண்டுவெடிப்பு மிக பலமாக இருந்ததால் இறந்தவர்களின் உடல்கள் பல பாகங்களாக சிதைந்ததாக கூறும் காவல்துறை அவர்கள் எங்ஙனம் அடையாளம் காணப்பட்டனர் என்பதை கூறவில்லை. இதில் இறந்த ஒருவரை மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்தே அவரின் உறவினர் ஒருவர் அடையாளம் காட்டியதாக கூறுகின்றனர். இந்த குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள், இந்துத்துவ தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.

கூடுதல் கண்காணிப்பாளர் துகாராம் ஓம்பாலேயின் மர்ம மரணம்

கிர்ஹம் சௌபாத்தியில் வைத்து அஜ்மல் கசாபை பிடிக்க முற்பட்டபோது அவன் துகாராம் ஓம்பாலேயை சுட்டதாகவும் அதில் அவர் மரணித்ததாகவும் காவல்துறை கூறியது. ஆனால், இந்த கூற்றிலும் பல சந்தேகங்கள் உள்ளன. சௌபாத்தியில் நடைபெற்ற என்கௌண்டர் குறித்து துணை கமிஷ்னர் தகவல்களை வயர்லஸ் மூலம் கமிஷ்னருக்கு வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அதில் இரண்டு தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டது குறித்துதான் அவர் குறிப்பிட்டுள்ளாரே அல்லாமல் காவல்துறை அதிகாரியின் மரணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற என்கௌண்டர் குறித்து செய்தி கிடைத்தவுடன் பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் தங்களின் நிருபர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தன. ஒரு மணியில் இருந்து தகவல்களை வழங்கிய அவர்களும் காவல்துறை அதிகாரியின் மரணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

சம்பவ இடத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்ததாகவும் அவற்றில் காயமடைந்த இரண்டு தீவிரவாதிகளை அழைத்து சென்றதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். டி.பி. மார்க் காவல்நிலையத்திற்கு சொந்தமான வேனில் ஓம்பாலே அழைத்து செல்லப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஓம்பாலேவை அழைத்துச் சென்ற நபர்கள் யார் என்பதை சம்பவ இடத்தில் இருந்த எந்த காவலரும் கூறவில்லை. தங்களின் கூற்றை நிரூபிக்க ஒரு பொது சாட்சியைக் கூட காவல்துறை கொண்டு வரவில்லை. சம்பவ இடத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதும் இதனை செய்ய காவல்துறை முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நடைபெற்றதாக சொல்லப்படும் என்கௌண்டர் குறித்த சந்தேகங்களை இந்த கேள்விகள் அதிகரிக்கின்றன.

கூடுதல் கமிஷ்னர் சதானந்த தத்தேயின் சந்தேமிக்க செயல்பாடுகள்

மும்பை மத்திய பகுதியின் கூடுதல் கமிஷ்னரான சதானந்தத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காமா மருத்துவமனை பகுதி வராது. ஆனால், சம்பவம் நடைபெற்ற தகவல் கிடைத்தவுடன் மும்பை தென் பகுதி கூடுதல் கமிஷ்னரிடம் ஏதேனும் உதவி தேவையா என்று கேட்டபோது, அவர் தன்னை சி.எஸ்.டிக்கு செல்லுமாறு கூறியதாக அவர் தெரிவித்தார். ஜி.டி. மருத்துவமனையின் பின்புறத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக தகவல் வந்ததாகவும் ஆனால், மஹாபாலிகா சாலையில் இருந்து பார்த்தபோது வித்தியாசமாக அங்கு எதுவும் தெரியவில்லை என்பதால் காமா மருத்துவமனைக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இத்தகைய முக்கியமான கட்டங்களில் மூத்த அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் ஒரு கூடுதல் கமிஷ்னர் அந்தஸ்தில் உள்ளவர் மற்ற பகுதிக்கு செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அபத்தமான விஷயம். ஜி.டி. மருத்துவமனை பின்புறம் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக வந்த தகவல்களை தொடர்ந்து அங்கு செல்லாமலேயே இவர் முடிவுக்கு வந்ததும் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இதே ரங்பவன் லேனில் வைத்துதான் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் கழித்து கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவராகவே தன்னிச்சையாக காமா மருத்துவமனைக்கு சென்றதும் இவர் மீதான சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன.

காமா மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து ஐந்தாவது மாடியை நோக்கி இரண்டு தீவிரவாதிகளும் வந்தபோது அவர்களை நோக்கி தான் சுட்டதாகவும் ஆனால் குண்டு அவர்கள் மீது பட்டதா என்று தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சதானந்த் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு நடதினால் அது தப்புவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை சாதாரண மனிதன் கூட அறிந்து கொள்வான். அப்படி சந்தேகம் இருந்தால், தன்னிடமிருந்த செமி ஆட்டோமேடிக் துப்பாக்கியை அவர் ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. கர்கரே மற்றும் உயர் அதிகாரிகளை கொன்றதாக கூறப்படும் இதே தீவிரவாதிகள் சதானந்த் மீது ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்ற கேள்விக்கும் பதில் இல்லை. சதானந்த் தத்தே தெளிவான பொய்யை கூறுகிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.

தொலைபேசி அழைப்புகள் குறித்து தெளிவான விசாரணை இல்லை

லஷ்கர்இதய்பா தீவிரவாதிகள் பயன்படுத்திய தொலைபேசிகள் நவம்பர் 24 முதல் 27 வரை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக கால்போன்ஸ் என்ற இண்டர்நெட் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளர் நிசார் ஷரீஃப் சாட்சியம் அளித்தார். இவ்வளவு தெளிவான ஆதாரம் கிடைத்தபோதும், இந்த தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை பெறுவதற்கு விசாரணை அதிகாரிகள் முயற்சி காட்டவில்லை. ரா தங்களிடம் கொடுத்த 35 மொபைல் போன்களில் எத்தனையை தீவிரவாதிகள் பயன்படுத்தினார்கள் என்பதையும் அவர்கள் விசாரிக்கவில்லை.

அஜ்மல் கசாப் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில், ஸஃபர் ஷா (குற்றவாளி எண்: 7) தங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மொபைல் போனை கொடுத்ததாகவும் அவற்றில் இந்தியாவின் சிம் கார்ட்கள் இருப்பதாகவும் அவை மும்பை கடல் பகுதியை அடைந்த பிறகுதான் வேலை செய்யும் என்று கூறியதாக காவல்துறை கூறியது.

ஆனால், நவம்பர் 24 முதல் 27 வரை தொலைபேசிகள் அதிக அளவில் பயன்படுத்தியதாக நிசார் ஷரீஃப் கூறியது கசாப்பின் வாக்குமூலத்தில் உள்ள பிரச்சனையை காட்டுகிறது. இத்தனை சந்தேகங்கள் உள்ள போதும் அவற்றை குறித்து எத்தகைய கேள்வியையும் எழுப்பாமல் உளவுத்துறையின் தாளத்திற்கு ஏற்ப நீதித்துறையும் ஆடி இருப்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

காட்சிகள் வெளிப்படுத்திய உண்மைகள்

ஸ்கோடா வாகனத்தில் சென்ற இரண்டு தீவிரவாதிகளும் கொலை செய்யப்பட்டனர் என்ற செய்தியை பெரும்பான்மை செய்தி சேனல்கள் வெளியிட்டன. கிர்ஹம் சௌபாத்தியில் இந்த என்கௌண்டர் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. பெரும்பான்மையான சேனல்கள் உடனடியாக தங்கள் நிருபர்களை அங்கு அனுப்பினர். இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட செய்தியை அனைவரும் தொடர்ந்து வெளியிட்டனர்.

உளவுத்துறையின் திட்டத்தின் பிரகாரம் இதில் ஒருவரைதான் கொலை செய்ய வேண்டும். மற்றவனை வைத்து, தாங்கள் லஷ்கர்இதய்பா தீவிரவாதிகள் என்ற கதையை சொல்ல வேண்டும் என்பது திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக இருவரும் கொல்லப்பட்டதால் சில நிமிடங்கள் தினைத்தனர் உளவுத்துறையினர். மாற்று திட்டத்தை யோசித்தனர். சி.எஸ்.டி. நிலையத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டது இவர்களுக்கு சாதகமாக அமைந்தது. தங்கள் கைவசம் இருந்த நபர்களில் ஒருவனான அஜ்மல் கசாபை அங்கு அழைத்துச் சென்று தங்களுக்கு வேண்டிய பத்திரிகையாளர்களை கொண்டு இரவு 1 மணிக்கு அவனை புகைப்படம் எடுத்தனர்.

அஜ்மல் கசாபின் ஒரு புகைப்படம் மஹாராஷ்டிரா டைம்ஸ் போட்டோகிராபர் ஸ்ரீராம் வெர்னேகரால் எடுக்கப்பட்டது. மற்ற புகைப்படம் மும்பை மிரர் போட்டோகிராபர் செபஸ்டியன் டிசோசாவால் எடுக்கப்பட்டது. கசாபும் இஸ்மாயிலும் சேர்ந்து நிற்கும் மற்றொரு புகைப்படம் ஒரு செக்யூரிட்டி கேமராவில் பதிவானது. இந்த புகைப்படங்களை இரவு 1.45 மணிக்கு சேனல்களுக்கு உளவுத்துறையினர் கொடுத்தனர். ஆனால், புகைப்படங்கள் குறித்த விபரங்கள் எதையும் வழங்கவில்லை.

செய்தியை முந்திக் கொடுக்க வேண்டும் என்ற வெறியும் உளவுத்துறை கொடுத்த புகைப்படம் என்ற தைரியமும் சேனல்களை இந்த புகைப்படங்களை வெளியிட வைத்தன. ஒவ்வொரு சேனலும் தனது மனதில் தோன்றிய செய்தியை புகைப்படத்திற்கு கொடுத்தன.

* ஒரு ஹோட்டலின் மேற்புறத்தில் கசாப் நிற்பதாக செய்தி வெளியிட்டது ஸீ நியூஸ். கசாபும் இஸ்மாயிலும் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘தாஜ் ஹோட்டலில் நிற்கும் தீவிரவாதிகள்’ என்று செய்தி வழங்கியது.

* இந்த புகைப்படம் தாஜ் ஹோட்டலில் எடுக்கப்பட்டதா அல்லது ஓபராய் ஹோட்டலில் எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை என்று முதலில் கூறிய ஸ்டார் நியூஸ், காலை 5.52 மணிக்கு ‘இது சி.எஸ்.டி. ரயில்வே ஸ்டேஷன் வெளியே எடுக்கப்பட்டது’ என்று கூறியது.

* இரவு 2.15 மணியில் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட டைம்ஸ் நவ் பல்வேறு யூகங்களை வெளியிட்டது. ‘தீவிரவாதிகளில் ஒருவன் என்று நம்பப்படுகிறது’ ‘ஓபராய் ஹோட்டலுக்கு வெளியே எடுக்கப்பட்ட புகைப்படம்’ ‘டெக்கான் முஜாஹிதீன் தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள்’ என பல செய்திகளை வெளியிட்டது.

* இரவு 2.02 மணியில் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட இந்தியா டி.வி. முதலில் ‘தாஜ் ஹோட்டலில் உள்ள தீவிரவாதிகள்’ என்று செய்தி வெளியிட்டது. செய்தி வாசிப்பாளரும் நிருபரும் பல்வேறு விதங்களில் அலசிய போதும் அவர்களால் தெளிவான செய்தியை கொடுக்க முடியவில்லை.

* இரவு 1.51ல் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட என்.டி.டிவி புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதையோ யாரால் எடுக்கப்பட்டது என்பதையோ தெரிவிக்கவில்லை. காலை 6 மணியளவில் இது தீவிரவாதிகளில் ஒருவனின் புகைப்படம் என்றும் மஹாராஷ்டிரா டைம்ஸ் போட்டோகிராபரால் எடுக்கப்பட்டது என்றும் கூறியது. ஆனால், புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதை காலை 10 மணி வரை கூறவில்லை.

* ஐ.பி.என். 7 தொலைக்காட்சி வெறும் தீவிரவாதி என்று மட்டும் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டது.

* இரவு 1.56 மணிக்கு புகைப்படத்தை வெளியிட்ட ஆஜ் தக் சேனல் ‘புகைப்படம் மும்பை காவல்துறையால் வழங்கப்பட்டது’ என்றும் கூறியது.

எட்டு மணி நேரத்தில் குறைந்தபட்சம் ஐம்பது முறையாவது ஒவ்வொரு சேனலும் இந்த புகைப்படங்களை வெளியிட்டன. ஆனால், தெளிவான செய்தியை எவரும் வழங்கவில்லை. உளவுத்துறையினர் உரிய திரைக்கதையை தயார் செய்யாததால் தொலைக்காட்சி சேனல்களால் அதனை வழங்க முடியவில்லை என்றுதான் நாம் எண்ண வேண்டியுள்ளது.

செய்தியை மாற்றிய சேனல்கள்

மறுதினம் உளவுத்துறை தனது புதிய கதையுடன் தயாராக வந்தது. ஆனால், காலை செய்தித்தாள்களில் கிர்ஹம் சௌபாத்தி என்கௌண்டர் குறித்த செய்திகள் வெளிவந்துவிட்டன. எனவே இருக்கும் ஒரே வாய்ப்பான தொலைக்காட்சி சேனல்களின் உதவியை நாடியது உளவுத்துறை. முந்தைய இரவின் செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் தாங்கள் வழங்கும் செய்திகளை மட்டும் வெளியிட வேண்டும் என்றும் சேனல்களை கேட்டுக்கொண்டது. இந்த புதிய செய்தியின் பிரகாரம், என்கௌண்டரில் ஒரு தீவிரவாதிதான் கொல்லப்பட்டான். மற்றொருவன், கைது செய்யப்பட்டுள்ளான். ஒரு காவல்துறை அதிகாரியும் பலமான காயமடைந்தார். பின்னர் அவர் மரணித்து விட்டார். இதுதான், உளவுத்துறை கொடுத்த செய்தி.

இந்த பொய்யை வெளியிட பெரும்பான்மை ஊடகங்கள் முதலில் மறுத்தன. ஆனால், உளவுத்துறை தங்களிடம் வைத்தது கோரிக்கை அல்ல, கட்டளை என்பதை அவர்கள் விரைவில் புரிந்து கொண்டன. ஒவ்வொருவராக உளவுத்துறையின் பொய் செய்தியை வெளியிட ஆரம்பித்தனர்.

ஆஜ் தக் இந்தி சேனல்தான் முதலில் உளவுத்துறையின் இந்த கதையை வெளியிட்டது. கிர்ஹம் சௌபாத்திக்கு தனது நிருபரை அனுப்பாததால் இந்த பொய்யை வெளியிடுவதில் அவர்களுக்கு பெரிய அளவில் மாச்சர்யங்கள் ஏதும் இல்லை. ஆனால், இதில் அசுர பல்டி அடித்தது டைம்ஸ் நவ் சேனல்தான். கிர்ஹம் சௌபாத்தியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை பல முறை கூறி வந்த இந்த சேனல் காலை முதல் ஒருவர்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வாய் கூசாமல் பொய் கூறியது. தொடர்ந்து மற்ற சேனல்களும் இதையே வெளியிட ஆரம்பித்தன. இரவில் பலரும் தொலைக்காட்சிகளை பார்க்காததாலும் காலையில் இருந்து உளவுத்துறையின் கதையே தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதாலும் பொதுமக்கள் மத்தியில் இந்த செய்தி மட்டும் ஆழமாக பதிந்தது.

தேவையற்ற புகைப்படங்களை நீக்கிய உளவுத்தறை

மூன்று புகைப்படங்கள் இருந்தபோதும் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் இரண்டு புகைப்படங்களை முற்றிலுமாக நீக்கியது உளவுத்துறை. செக்யூரிட்டி கேமரா எடுத்ததாக சொல்லப்பட்ட புகைப்படம் மாற்றியமைக்கப்பட்டது என்பது தெளிவு. சௌபாத்தி என்கௌண்டர் நடைபெற்றது நள்ளிரவு 12.30 மணிக்கு. இவர்களின் கூற்றுப்படி அப்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டு விட்டான். அப்படியிருக்க இரவு 1 மணிக்கு அவன் எப்படி கசாபுடன் இருக்க முடியும்? இதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பது கடினம் என்பதால் இந்த புகைப்படத்தை நீக்கியது உளவுத்துறை.

செபஸ்டியன் டிசோஸா எடுத்த புகைப்படத்தில் தேவையான அளவு கொடூரம் இல்லை என்பதால் அதையும் ஓரம் கட்டியது. ஸ்ரீராம் வெர்னேகர் எடுத்த புகைப்படம்தான் தங்களுக்கு ஏற்ற விதத்தில் இருந்ததால் அதனை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். (இந்த புகைப்படத்தில் கசாபின் முகத்தில் இரத்த துளிகள் இருக்கும். 20,30 அடி தூரத்தில் இருந்து சுட்ட ஒருவன் மீது எவ்வாறு இரத்த துளிகள் பட்டன என்பது உளவுத்துறைக்கே வெளிச்சம்).

ஆனால், நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த ஸ்ரீராம் இந்த புகைப்படத்தை, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து எடுத்ததாக கூறினார். ஆனால், தரை மட்டத்தில் இருந்துதான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதையும், இரண்டாவது மாடியில் இருந்து எடுத்திருந்தால் தீவிரவாதியின் முழு உருவமும் பதிவு பெற்றிருக்காது என்பதையும் சாதாரண அறிவு படைத்த எவரும் அறிவர். ஆனால், நீதிமன்றம் எத்தகைய கேள்வியும் எழுப்பாமல் ஸ்ரீராமின் கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டது.

காமா மருத்துவமனை மர்மங்கள்

மும்பை தாக்குதலின் போது சிறப்பு பிரிவு அலுவலகத்தின் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் ஜி.டி. மருத்துவமனை அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து காவல்துறையின் பதிவுகளில் தகவல் ஏதும் இல்லை. காமா மருத்துவமனையில் இருந்து தீவிரவாதிகள் இரவு 11.50 மணியளவில் தப்பிச் சென்று ரங்பவன் லேனில் கர்கரே உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை கொலை செய்தனர். அங்கிருந்து தப்பி செல்லும்போது கிர்ஹம் சௌபாதி என்கௌண்டரில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்றொருவன் காயத்துடன் பிடிபட்டான். இதுதான் உளவுத்துறை மற்றும் காவல்துறையின் வாதம்.

ஆனால், ரங்பவன் லேனில் இரவு 11 மணியில் இருந்தே தீவிரவாதிகள் இருந்ததை பல சேனல்களின் செய்திகள் மற்றும் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. ரங்பவன் லேனில் நடைபெற்ற கர்கரே உள்ளிட்டோரின் கொலைகளை மறைப்பதற்குதான் காமா மருத்துவமனையில் இவர்கள் நாடகம் ஆடியுள்ளதாக தெரிகிறது.

ஒரு புறம் காமா மருத்துவமனையில் இருந்து இரவு 11.50 மணிக்கு தீவிரவாதிகள் தப்பியதாக தெரிவித்தனர். ஆனால், இரவு 1.30 மணியளவில் மீண்டும் காமா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு ஆரம்பித்து காலை 5 மணி வரை நடைபெற்றது. சில நோயாளிகளை பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்தனர் என்றும் செய்திகள் வெளிவந்தன.

ஒன்றரை மணிநேரம் கழித்து மீண்டும் துப்பாக்கிச் சூட்டினை ஆரம்பித்த இந்த தீவிரவாதிகள் யார்? தீவிரவாதிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரிகள் யார்? தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா? அவர்கள் அல்லது அவர்களின் உடல்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டன? இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. காமா மருத்துவமனையில் இருந்த தீவிரவாதிகளை உளவுத்துறையினர் பத்திரமாக மீட்டு அழைத்து சென்றிருக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த சந்தேகம்தான் மக்களுக்கு எழும்? ஒரு உண்மையான மறுவிசாரணை நடத்தப்பட்டால் ஒழிய இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்காது.

நீதிமன்ற விநோதங்கள்

சோசியலிச தலைவர் ராதாகாந்த் யாதவ் மற்றும் ஜோதி பதேகர் ஆகியோரின் மனுக்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கி நின்ற நிலையில், அஜ்மல் கசாபின் மரண தண்டனையை அதே மும்பை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு உறுதி செய்தது. எந்த விசாரணையை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டதோ அதே விசாரணையின் அடிப்படையில் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை கூறி, தனது வழக்கறிஞர்களை சந்திக்கும் உரிமை கூட கசாபிற்கு மறுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் கசாப் ஒரு சிறப்பு மனுவை தாக்கல் செய்தான். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் நீதிபதி ராஜு ராமசந்திரனை அமிகஸ் க்யூரேயாகவும் (வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி புரிபவர்) எதிர் தரப்பு வழக்கறிஞராகவும் நியமித்தது. அவரிடம் இன்னும் அதிகமான தகவல்களை ரதாகாந்த் யாதவ், முஷ்ரிஃப் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர். தனது கடமையை நேர்மையாக நிறைவேற்றிய ராஜு ராமசந்திரன், கசாபும் இஸ்மாயிலும் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் கிடையாது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

* லஷ்கர்இதய்பா தீவிரவாதிகள் கொண்டு வந்த ஐந்து நோக்கியா செல்போன்களில் எதுவும் கசாபிடமும் இஸ்மாயிலிடமும் பிடிபடவில்லை.

* தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானில் இருந்து அவர்களை இயக்கியவர்கள் ஏறத்தாழ பத்து மணிநேரம் தொலைபேசியில் உரையாடினர். இந்த உரையாடலில் கசாப் மற்றும் இஸ்மாயிலின் பெயர்கள் எங்கும் இடம்பெறவில்லை. ஆனால், மற்ற எட்டு தீவிரவாதிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன. அவர்கள் கசாப் மற்றும் இஸ்மாயிலுடன் பேசியதற்கான ஆதாரமும் இல்லை.

* பாகிஸ்தானில் இருந்து பேசியவர்கள் சி.எஸ்.டி. தாக்குதலை நடத்தியதும் உயர் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ததும் தாங்கள்தான் என்று கூறவில்லை.

எனவே இந்த தாக்குதல் நிகழ்வுகளை இரண்டாக பிரித்து விசாரணை செய்ய வேண்டும் (ஹோட்டல்கள் தாஜ், ஓபராய் மற்றும் நரிமன் ஹவுஸ் தாக்குதலை தனியாகவும் சி.எஸ்.டி. காமா மருத்துவமனை, ரங்பவன் லேன் தாக்குதலை தனியாகவும்) என்ற கோரிக்கையை ராஜு ராமசந்திரன் முன்வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை நீதிமன்றம் உரிய காரணங்கள் இன்றி நிராகரித்தது. கசாபிற்கு உரிய சட்ட உரிமைகள் வழங்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டவர், கசாபிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் அவனாக முன்வந்து கொடுத்தது அல்ல என்றும் அது விசாரணை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது என்பதையும் சான்றுகளுடன் விளக்கினார். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு கசாப் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என்றும் வாதிட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை முழுமையாக வெளியிட்ட ஊடகங்கள் ராஜு ராமசந்திரனின் வாதத்தை வெளியிடுவதை முற்றிலுமாக தவிர்த்தன. மக்களுக்கு உண்மை சென்றடையக் கூடாது என்பதில் இவர்கள் கவனமாக இருந்தனர் என்பதைதான் இது காட்டுகிறது. உளவுத்துறை ஊடகங்களை பணிய வைத்திருக்க வேண்டும். வழக்கை உற்று கவனித்து வந்த சமூக ஆர்வலர்களும் தேச நலனில் அக்கறை கொண்டவர்களும் கசாபிற்கு தூக்கு தண்டனை உறுதியாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். ராஜு ராமசந்திரனின் பணிக்காக அவருக்கு 14.5 லட்சம் ரூபாயை சம்பளமாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மரண தண்டனை தீர்ப்பால் மனம் நொந்த ராஜு ராமசந்திரன் இந்த பணத்தை பெறுவதற்கு மறுத்துவிட்டார்.

தனது தீர்ப்பில் ராஜுவை குறைகாண்பதற்கும் உச்சநீதிமன்றம் தவறவில்லை. அதே சமயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் கூடுதல் கமிஷ்னர் சதானந்த் தத்தேயின் செயல்பாடுகள் குறித்து எவ்வித கேள்வியும் எழுப்பாமல் அவரை புகழ்ந்து சந்தோஷம் கொண்டது உச்சநீதிமன்றம்.

மும்பை தாக்குதலை நடத்துவதற்கு வசதியாக மும்பையின் வரைபடத்தை பஹீம் அன்சாரி மற்றும் சபாவுதீன் அகமது ஆகிய இருவரும்தங்களிடம் வழங்கியதாக கசாப் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தான். ஆனால், இதனை ஏற்பதற்கு விசாரணை நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் மறுத்து அவர்கள் இருவரையும் விடுவித்தன. கசாபின் இந்த கூற்றில் எவ்விதத்திலும் உண்மை இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்ததற்கு உச்சநீதிமன்றம் தனது பாராட்டுதலை தெரிவித்தது. கசாபின் ஒப்புதல் வாக்குமூலத்தின் இந்த பகுதி பொய் என்பதை அறிந்த நீதிமன்றங்கள் எப்படி அந்த வாக்குமூலத்தின் மற்ற பகுதிகளை ஏற்றுக்கொண்டனர் என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.

விசாரணை நீதிமன்ற நீதிபதி தஹிலியானியை வெகுவாக பாராட்டிய உச்சநீதிமன்றம், நேஷனல் ஜூடிசியல் அத்தாரிட்டியின் பாடத்திட்டத்தில் இந்த வழக்கை சேர்க்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால், நீதிபதி தஹிலியானி இந்த பாராட்டுகளுக்கு உரியவர்தானா?

* அஜ்மல் கசாபை அவனது வழக்கறிஞரான அப்பாஸ் கஸ்மியுடன் நீதிமன்றத்தில் மட்டுமே, அதுவும் காவல்துறையினர் உடன் இருக்கும்போது, சந்திக்க அனுமதி வழங்கினார்.

* அப்பாஸ் கஸ்மியை அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் ‘தீவிரவாத வழக்கறிஞர்’ என்றும் ‘பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்காக வாதாடுவதால் இவருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது வழங்கப்படும்’ என்றும் நீதிமன்றத்தில் கூறிய போது தஹில்யானி மௌனமாகவே இருந்தார்.

* வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மியை பொய்யர் என்று இவரே கூறினார். ஆனால், இந்த வார்த்தையை மறுதினம் திரும்ப பெற்றுக் கொண்டார்.

* சாட்சிகள் முக்கியமான உண்மைகளை கூறிக்கொண்டிருந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தஹிலியானி விசாரணையை ஒத்தி வைத்தார். மறுதினம் சாட்சியம் கூறிய இந்த சாட்சிகள் தங்கள் வாதத்தை அப்படியே மாற்றிக் கூறினர்.

* சில சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மி தொடர்ந்து கோரிக்கை வைத்தபோது அவரை விசாரணையில் இருந்தே நீக்கினார்.

* காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி அழைப்புகளின் சிடி, முக்கிய வீடியோ பதிவுகள், ஹேமந்த் கர்கரேயின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் என முக்கியமான எதையும் சமர்ப்பிக்க இவர் கட்டளையிடவில்லை.

* தீவிரவாதிகளை எதிர்கொள்ள கர்கரேயுடன் ரகுவன்ஷி ஏன் செல்லவில்லை. கர்கரே வரும்வரை அவர் ஏன் காத்துக் கொண்டிருந்தார், காமா மருத்துவமனை மர்மங்கள் என எது குறித்தும் இவர் கேள்வி எழுப்பவில்லை. இப்படி ஒரு விசாரணையை நடத்தியவருக்கு எதற்கு பாராட்டு பத்திரம்?

கசாபிற்கு தூக்கு

அஜ்மல் கசாபிற்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 29,2012 அன்று உறுதி செய்தது. தீர்ப்பின் நகல் அவனுக்கு செப்டம்பர் 8,2012 அன்று கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. சமூக ஆர்வலரும் மும்பையை சார்ந்த வழக்கறிஞருமான யுக் சௌத்ரி, கசாப்பிற்கு இந்திய சட்டங்கள் புதிது என்பதாலும் அவன் படிப்பறிவில்லாதவன் என்பதாலும் அவனுக்கு கருணை மனுவை தயாரிப்பதற்கு உரிய சட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் கோரிக்கை வைத்தார்.

ஆனால், செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் அஜ்மல் கசாப் இந்தி மொழியில் கருணை மனுவை எழுதியதாகவும் அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அவன் இந்தியாவிற்கு வரும் முன்னர் இந்தி கற்று கொடுக்கப்பட்டதாகவும் கூறினர். ஆனால், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஊர்வசி சர்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த கருணை மனு குறித்த தகவல்களை பெற்றார். வெறும் நான்கு வரிகளை கொண்ட இந்த மனு பாரசீக அரபி எழுத்துருவில் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதிக வேகமாக கசாபின் கருணை மனு மறுக்கப்பட்டது. இவனுடைய மனுவிற்கு முன்னர் 29 கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கசாபின் கருணை மனுவை ஜனாதிபதி எப்போது மறுத்தார் என்ற செய்தி யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. நவம்பர் 21, 2012 அதிகாலையில் அவனை ரகசியமாக தூக்கில் போட்ட பின்னர்தான். அவன் மனு நிராகரிக்கப்பட்டதே மக்களுக்கு தெரிந்தது.

மும்பையின் ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் இருந்து புனேயின் எரவாடா சிறைச்சாலை வரை கசாபை அழைத்து செல்லும் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் மும்பை தாக்குதல் நடைபெறும் போது கூடுதல் கமிஷ்னராக இருந்த சதானந்த் தத்தே!

கசாபை அவசரமாக தூக்கில் போட்டதன் மூலம் ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து முறையீடு செய்யும் உரிமையை அரசாங்கம் அவனுக்கு மறுத்த ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த போதும் முருகன், சாந்தன், பேரறிவாளன், மஹேந்திர நாத் தாஸ் போன்றோர் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்து இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். மனித உரிமை ஆர்வலர்கள் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர்ப்பதற்காகவே கருணை மனு நிராகரிக்கப்பட்டதையும் தூக்கு தண்டனை தேதியையும் ரகசியமாக வைத்ததாக மத்திய உள்துறை அமைச்சகமும் மஹாராஷ்டிரா முதல்வரும் நவம்பர் 21 அன்று தெரிவித்தனர். நீதியை நிலைநாட்டுவதில் இவர்களுக்கு உள்ள அக்கறையை இந்த அறிக்கை காட்டுகிறது.

மும்பை தாக்குதல் குறித்த உண்மை சம்பவங்கள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கசாப் அவசரமாக தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதலில் ஆரம்பித்து கசாபின் மரணம் வரை நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் முன்னின்று நடத்தியது உளவுத்துறை. அவர்களுக்கு தேவையான உதவிகளை காவல்துறை, அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவற்றில் உள்ள சில கறுப்பு ஆடுகள் செய்து கொடுத்தன. ‘பாகிஸ்தான்’ ‘ஜிஹாது’ ‘கஷ்மீர்’ ‘தீவிரவாதம்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் வாயை அடைத்து விடுகின்றனர். இதே மாயையை பயன்படுத்தி இன்று வரை தங்களின் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

அகண்ட பார்ப்பன ராஜ்ஜியத்தை உருவாக்க விரும்பும் இந்துத்துவ சக்திகளின் முயற்சி ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியின் விசாரணையால் தடுக்கப்பட்டது. இதனை சகித்துக் கொள்ள முடியாத இந்த நாசகர சக்திகள் உளவுத்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளின் துணையுடன் மும்பை தாக்குதல்களை சாதகமாக பயன்படுத்தி அவரை கொலை செய்தனர். லஷ்கர்இதய்பாவின் தாக்குதல் குறித்து தெளிவான தகவல்கள் இருந்தபோதும் கர்கரேயை கொலை செய்வதற்காக நாட்டின் பாதுகாப்பை கூட கவனத்தில் கொள்ளாமல் தங்கள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். கர்கரேயின் மரணத்துடன் இந்துத்துவ தீவிரவாதிகள் மீதான விசாரணையும் மந்த நிலையை அடைந்துள்ளது.

இந்த சதிகளை வெளியே கொண்டு வருவதில் நீதிமன்றம் உரிய கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால், உளவுத்துறையின் நெருக்குதலில் நீதிமன்றம் கூட உரிய நீதியை வழங்க முடியாமல் தடுக்கப்பட்டது என்பதுதான் வேதனையான உண்மை. மும்பை தாக்குதல் சம்பந்தமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பொதுநல வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மும்பை தாக்குதலின் உண்மை முகம் பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்படும். ஆனால், நீதிமன்றம் அதனை செய்யுமா? மத்தியில் அமர்ந்துள்ள மோடி தலைமையிலான அரசு நீதித்துறை மீது செலுத்தி வரும் ஆதிக்கங்களை பார்க்கும் போது இதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறிதான். விடைகளை தேடும் வினாக்கள் கேள்விக்குறியாக நிற்கின்றன.





சந்தீப் தாங்கே, ராம்ஜி கல்சாங்ரா மரணம்?

மாலேகான் 2008 குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருபெரும் குற்றவாளிகள் சந்தீப் தாங்கே மற்றும் ராம்ஜி கல்சாங்ரா. இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக விசாரணை ஏஜென்சிகள் தெரிவித்து வருகின்றன. மும்பை தாக்குதலுக்கு பின்னர்தான் இவர்கள் தலைமறைவாகினர். இந்த இரு அபிநவ் பாரத் தீவிரவாதிகளும் மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்றும் இருவரும் விலே பார்லேவில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் இறந்திருக்கலாம் என்றும் இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்றும் முஷ்ரிஃப் தனது புத்தகத்தில் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்துத்துவ தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வெடிகுண்டு வழக்குகளை இத்துடன் முடித்து விடுவதற்காக உளவுத்துறை நடத்திய திட்டமாக இது இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கவிதா கர்கரே மரணம்

மும்பை தாக்குதல்களில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரேயின் மனைவி கவிதா கர்கரே செப்டம்பர் 29 அன்று மரணமடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலைக்கு சென்றவர் அதே நிலையிலேயே மரணமடைந்தார்.

கர்கரேயின் மரணம் ஏற்படுத்திய சந்தேகங்களை வெளியே கொண்டு வருவதில் சட்டரீதியான போராட்டங்களை அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக நடத்தியவர் கவிதா கர்கரே. கர்கரேயின் புல்லட் புரூஃப் ஆடை என்ன ஆனது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவர் விபரங்களை கேட்டிருந்தார். ஆனால், அந்த ஆடை காணாமல் போனது என்று மொட்டையாக பதில் அளிக்கப்பட்டது. தனது கணவர் மற்றும் மற்றவர்களின் மரணம் குறித்த தெளிவான விளக்கம் கிடைக்காத நிலையில் ‘இந்த நாட்டில் தியாகி ஆகும் குற்றத்தை மட்டும் செய்து விடாதீர்கள்’ என்று ஆதங்கத்துடன் ஒரு கவிதையில் குறிப்பிட்டார்.

மாலேகான் விசாரணையை கர்கரே நடத்திவந்த போது அவரை பலவிதங்களிலும் அவமானப்படுத்தி மிரட்டும் வேலைகளை சங்பரிவார் தலைவர்களும் இயக்கத்தினரும் செய்து வந்தனர். ஆனால், கர்கரே கொலை செய்யப்பட்டவுடன் அவருக்காக நீலிக்கண்ணீர் வடித்தனர். கர்கரேயின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறவும் நிவாரண தொகை வழங்கவும் முனைந்தார் தற்போதைய பிரதமர் மோடி. ஆனால், இவர்களின் கபட நாடகங்களையும் கர்கரேக்கு எதிராக இவர்களின் பேச்சுகளையும் மறக்காத கவிதா கர்கரே மோடியை சந்திக்க மறுத்துவிட்டார்.

கர்கரேயின் மரணத்தை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு தியாகிகள் பென்ஷன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், மாநில அரசோ வெறும் காவல்துறை பென்ஷனை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால், இது குறித்து எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அதனையும் காவல்துறையினரின் நல்வாழ்விற்கு செலவழிக்குமாறு கூறிவிட்டார் கவிதா. தன்னுடைய விரிவுரையாளர் பணி மூலம் பெற்ற சம்பளத்தை கொண்டே தனது குடும்பத்தினரை கவனித்து வந்தார். மரணித்த பிறகு அவரின் விருப்பத்தின் பிரகாரம் அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

என்ன ஆனார் ஹெட்லி?

மும்பை தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் தாக்குதல் நடைபெற்ற இடங்களில் சுற்றித் திரிந்து தகவல்களை தீவிரவாதிகளுக்கு வழங்கியவர் டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற அமெரிக்கர். இவர் அமெரிக்க உளவுத்துறைக்கும் லஷ்கர்இதய்பாவிற்கும் உளவாளியாக செயல்பட்டார் என்றும் கூறப்பட்டது. இதனை டபுள் ஏஜெண்ட் என்பார்கள்.

ஹெட்லியை கைது செய்த அமெரிக்கா, வழக்கை விசாரித்து அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஜனவரி 2013ல் வழங்கியது. ஹெட்லி மீது மோசமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் உபயோகமான தகவல்களை வழங்கியதாலும் பூரண ஒத்துழைப்பு நல்கியதாலும் அவருக்கு மரண தண்டனையை கோரவில்லை என்று அரசு தரப்பு கூறியது. அத்துடன் ஹெட்லியை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியது.

ஹெட்லியை இந்தியாவிற்கு கொண்டு வந்தே தீருவோம் என்று சில நாட்கள் எகிறி குறித்து முந்தைய அரசு பின்னர் மௌன நிலைக்கு சென்றது. முந்தைய காங்கிரஸ் அரசின் வெளியுறவு கொள்கையுடன் எவ்விதத்திலும் முரண்படாத தற்போதைய பா.ஜ.க. அரசு அதே நிலையை தொடர்கிறது.

ஹெட்லியின் பெயர் இனி நமது நினைவுகளை விட்டும் அகற்றப்படும். 35 வருட தண்டனை முடிவடைவதற்கு முன்னரே ஹெட்லி விடுவிக்கப்பட்டாலும் இங்குள்ள அதிகார வர்க்கத்தினர் அதை குறித்து எவ்வித கவலையும் கொள்ள மாட்டார்கள்.

ஞாபகம் இருக்கிறதா?

மாலேகான் 2008 குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித். இராணுவ பணியில் உள்ள போதே தீவிரவாத செயல்களில் இடம் பெற்றதற்காக கைது செய்யப்பட்ட முதல்வன். ‘அகண்ட இந்து ராஜ்ஜியம்’ உருவாக்க வேண்டும் என்ற குறுகிய சிந்தனை கொண்டு அதற்காக அனைத்து தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டவன். அபிநவ் பாரத் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய புள்ளி.

இவன் மற்றும் தயானந்த பாண்டே ஆகிய இருவரின் லேப்டாப்களில் இருந்து முக்கிய தகவல்கள் பெறப்பட்டன. நேபாளம், இஸ்ரேல் என இவர்களின் நாசகர கரங்கள் விரிந்த உண்மைகள் வெளிவந்தன. இந்துத்துவ தீவிரவாதிகள் மீதான விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்த சமயத்தில்தான் ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்துடன் புரோகித் உள்ளிட்டோர் மீதான விசாரணை தொய்வை அடைந்தது.

புரோகித் இன்னும் சிறையில்தான் உள்ளான். விசாரணை முன்னேறாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

(நவம்பர் 2014 விடியல் இதழில் வெளியான கட்டுரை)

நன்றி:

No comments:

Post a Comment