Wednesday, 16 December 2015

மன்னன் சுந்தரபாண்டியன் கொடுத்த துலாபாரம்.!







மன்னன் சுந்தரபாண்டியனிடம் எடைக்கு எடை தங்கம், வைடூரியத்தை வாங்கிக்கொண்டு அவனை கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டனர் பார்ப்பனக் கூட்டம்.

மன்னன் சுந்தரபாண்டியனிடம் எடைக்கு எடை தங்கம், வைரம், வைடூரியம் இவைகளையெல்லாம் வாங்கிக்கொண்ட பார்ப்பனர்கள் மன்னனுடைய சிலையை வைக்க அனுமதி இல்லை என்று சொல்லி கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டனர்.!

‘பார்ப்பனர்களின் சுயநலத்தை பாரீர்.!’ என்று விளக்கி பேசினார் உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள்.

13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஒரு துலாபாரம் நடந்தது.

நான் சொல்லுவது வரலாற்றுச் செய்தி. அந்த துலாபாரம் எங்கே நடந்தது என்றால் உங்கள் ஊர் பக்கத்தில், திருச்சியில் நடைபெற்றது.

திருச்சிக்குப் பக்கத்தில் சிறீரங்கத்திற்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருக்கிறதில்லையா.? அங்கேதான் நடந்தது. அங்கே துலாபாரம் கொடுத்தவர் யார் தெரியும்களா? 

சுந்தர பாண்டியன். சுந்தரபாண்டியனை நம்முடைய ஆட்களுக்குத் தெரியாது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றால் தெரியும். ஏனென்றால் நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணினால் தான் தெரியும்.!

அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ன செய்தார் என்றால் ஒரிசா வரைக்கும் படையெடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துக் கொண்டு போனான்.

இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான்.

ஒரு அய்யர் வருவார். இந்த மாதிரி இடத்தில் அய்யர் எப்பொழுதும் வருவார். நீ பல போர்களை செய்திருக்கிறாய். பல உயிர்களைக் கொன்றிருக்கிறாய். அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய வேண்டும் என்றார்.

சரி, துலாபாரம் செய்யலாம். எங்கே செய்யலாம்? சிறீரங்கத்தில் போய் பெருமாளுக்கு செய்வோம் என்று சொன்னார்கள். சரி என்று வந்தார். உடனே பயம் வந்திடுமில்ல. யாருக்கு வரும்?

பணத்தை அதிகமாக சேர்த்தவனுக்கு, அல்லது ஆசை அதிகமாக இருக்கிறவனுக்கு வரும்.

இந்தப் பயமும், ஆசையுமே பக்திக்கு அடிப்படை காரணம். அவர்களுக்கும் ஆசை வந்தது. பெருமாளுக்குத் துலாபாரம் செய்யலாம் என்று வந்தார்கள்.

கோயிலில் தராசு கட்டினார்கள். பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் அணிந்து கொண்டு வந்தான். மகாராஜா அல்லவா.?

சக்ரவர்த்தி அல்லவா.? வந்து தராசில் உட்காரப் போனான். அப்பொழுது ஒரு பட்டர் கேட்டார், எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்கள்.? என்று.

அவன் வெள்ளரிக்காய் தருகிறேன், கத்தரிக்காய் தருகிறேன் என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள். வாழைப்பழம் தருகிறேன். முருங்கைக்காய் தருகிறேன். என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள்.

ஆனால், அவன் சுந்தரபாண்டியன் சொன்னான், நான் எடைக்கு எடை பணம் தரப் போகிறேன், வைரம் தரப் போகிறேன் இங்கே யாரோ ஒரு தோழர் சொன்னார், எடைக்கு தங்கம் தந்துவிட்டோம். அடுத்து வைரம் தருவோம் என்று சொன்னார்கள்.

இந்த மாதிரி எடைக்கு எடை தங்கம், வைரம், வைடூரியம், மரகதம் எல்லாம் தருகிறோம் என்று சொன்னார்.

உடனே பார்ப்பன மூளை வேலை செய்தது. எப்படி கெட்டிக்காரத் தனமாக செய்கிறார் பாருங்கள்.

நம்மாள்கள் இவைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மாள்கள் முன்னேற முடியாததற்குக் காரணமே இது தான்.

அவர்கள் என்ன செய்தார்கள்? ஓகோ, எடைக்கு எடை கொடுக்கப்போனால் தங்கம்- வைரம் எல்லாம் கொடுக்கப் போகிறான். அதுவும் நம்மவர்களுக்குத்தான் தரப் போகின்றான். அவன் வெறும் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது. ஒரு பட்டர் மன்னரைப் பார்த்து, மன்னா.!என்று கேட்டார். இவன், என்ன? என்று கேட்டான்.

நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்.? போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான் என்று சொன்னான், மன்னன்.

ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்கள். ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள் என்று சொன்னார்கள்.

போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இவைகளை எல்லாம் கட்டிக்கொண்டு செல்வான்.

இதுவே ஒரு 50 கிலோ சேர்ந்து போகும். அப்பொழுது இருந்த சுந்தரபாண்டியன் எல்லாம் என்னை மாதிரி இல்லிங்க. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் வரும். இன்னும் 50 கிலோ தங்கம் வருமல்லவா?

பார்ப்பான் எப்படி வேலை செய்கிறான் பாருங்கள்.

நம்மாள்களும் என்ன செய்வார்கள்.? செயலாளராக பார்ப்பானைத்தான் வைத்துக் கொள்வார்கள். மந்திரியாக ஒரு பார்ப்பானைத் தான் வைத்துக்கொள்வார்கள்.

போரிலே செய்கின்ற படுகொலைப் பாவங்களைப் போக்கத்தானே வந்திருக்கிறீர்கள்.? அதனால் போருக்கு போகிற மாதிரியே உட் காருங்கள் என்று சொன்னார்கள். சுந்தரபாண்டியன் பார்த்தான் பயந்து போய் விட்டான்.

பகைவரைக் கண்டு நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த பட்டரைக் கண்டு நடுங்குகின்றான். உடனே தளபதியை மன்னன் அழைத்தான். உடைவாள், கவசம் எல்லாம் வந்தது. போய் தராசில் உட்காரப் போகிறான்.

இன்னொரு பட்டர் இவனைவிட எம்ப்டன். அவன் என்ன சொன்னான்.?

‘மன்னா’ என்று அழைத்தான். இவன் என்னா’ன்னான். ‘கொஞ்சம் நில்லு.! நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்.?’ ‘போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன்.!’ என்று அவன் சொன்னான்.

‘சரி, நல்லா பண்ணுங்கோ; திவ்யமா பண்ணுங்கோ. ஆனால் ஒன்று, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள்.? என்று பட்டன் கேட்டான். 

இப்பொழுது புரிந்துகொண்டீர்கள் அல்லவா? சின்னக் குழந்தைகள் எல்லாம் சிரிக்கிறது. சுந்தரபாண்டியன் சிரிக்கவில்லை. 

‘போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்.?’

‘ஆம். போர்க்களத்திற்கு யானை மீது போனேன்.!’ என்று மன்னன் சொன்னான். யானை என்றால் சாதாரண யானை என்று நினைக்காதீர்கள்.!

எனது சொந்தக்காரர் ஊர் மதுரை. மதுரையில் உள்ள ஒரு பெருமாள் கோயிலுக்காக யானையை வளர்க்கிறார். 

‘ஏண்டா நம்மாள்கள் எல்லாம் ஆடுதானே வளர்ப்பார்கள். நீ யானை வளர்க்கிறாயே.!’ என்று கேட்டேன். அதற்கு அவன் ‘இல்லை இல்லை; கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்பதற்காகத் தான் அதனை செய்கிறேன்.!’ என்று சொன்னான்.

தெருவிலே போகிற யானை என்ன மாதிரி இருக்கும்.? சுந்தரபாண்டியன் போர்க் களத்திற்குப் போன யானை பட்டத்து யானை. திருச்சி மலைக்கோட்டை அளவுக்கு உயர்ந்து நிற்கக் கூடிய பட்டத்து யானை. நல்ல ஓங்கி வளர்ந்துள்ள யானை.

யானையினுடைய ஒவ்வொரு தந்தமும் 25 கிலோ எடை கொண்டது. பட்டத்து யானையோ ஆயிரம் கிலோ. யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும்.

‘யானையோடு மட்டுமல்ல; யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரி-அது ஒரு 100 கிலோ.இவ்வளவோடும் நீ வந்து உட்கார்ந்து செய்தால் தான் உன்பாவம் போகும்.!’ என்று சொல்லி விட்டான்.

பக்கத்திலே இருந்த அய்யர், ‘ஆமாம் மகாராஜா. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள்.!’ என்று சொன்னார்.

இன்னொருத்தன், ‘இவன் எப்படி துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம். யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு இவன் எப்படித் துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம்.!’ என்று சொன்னான்.

மன்னனும் அப்படியே கொடுப்பது என்று சொல்லி விட்டான். தராசா இல்லை.? நான் கண்டு பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, எல்லோரும் அம்மாமண்டபத்திற்கு வந்தார்கள். அந்த மண்டபத்தில் இப்பொழுது சீட்டாடுகிறார்கள். அப்பொழுது இல்லை.

அம்மாமண்டபத்திற்குப் போனார்கள். அப்பொழுதெல்லாம் காவிரியில் நிறையத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரண்டு பரிசலைப் பெரிதாகச் செய்தார்கள். யானை ஏறி நிற்கிற மாதிரி ஒரு பரிசல்.

இன்னொன்று அதே அளவுக்குப் பரிசல். இரண்டையும் கயிற்றிலே கட்டி காவிரி ஆற்றிலே மிதக்கவிட்டார்கள்.

தண்ணீரில் யானையைப் பரிசலில் நிற்க வைத்து, அதற்குச் சமமாக இன்னொரு பரிசலில் தங்கத்தை, வைடூரியத்தை கொட்டு என்று சொன்னார்கள். அப்படி எல்லாவற்றையும் கொட்டினார்கள்.

அதனால்தான் சொன்னார்கள் போலிருக்கிறது, ‘ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.!’ என்று. இப்படி கொட்டி நிறுத்து, சுந்தரபாண்டியன் மலை அளவு செல்வத்தை அவன் வாரி வழங்கினான்.

எல்லாமே பார்ப்பானுக்குப் போய்விட்டது. ஆக துலாபாரத்தை சுந்தரபாண்டியன் கொடுத்து விட்டான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியனை பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மன்னன் வைத்த ஒரு கோரிக்கை

கோயில் வாசலிலே சுந்தரபாண்டியன் நிற்கிறான். அப்பொழுது அந்த தலைமை பட்டரைப் பார்த்து, ‘எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது.!’ என்றான் மன்னன் சுந்தரபாண்டியன்.

யார்.? மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன். அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மன்னர்கள். கைகட்டி காத்திருக்கின்றார்கள்.

அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி பட்டரிடம் சாமி, ‘எனக்கு ஒரு கோரிக்கை.!’ என்று கேட்டான்.

கோயில் வளாகத்தில் என்னுடைய சிலை

என்ன கேட்டான் தெரியும்களா? ‘இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன்.!’ என்று கேட்டான். 

உடனே அந்த பட்டர், ‘இல்லை, இல்லை. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை.!’ என்று சொல்லி மறுத்துவிட்டான்.

சுந்தரபாண்டியன் நினைத்திருந்தால் இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமாக்கியிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில் கோவில் இருக்கிறது. இந்த பட்டரெல்லாம் அவன் போடுகின்ற பிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்தப் பெருமாளே அவன் போடுகின்ற பிச்சையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்த அளவுக்கு இருக்கிறது நிலைமை.

ஆனால் அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தானல்லவா.? ஒரு ஓரத்தில் அவனுடைய சிலையை வைப்பதில் என்ன குறைந்து போய்விட்டது.?

கடைசி வரைக்கும் வைக்கவில்லை. அதன் பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்ணினார்கள். ‘நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு ஒரு பூஜை பண்ணுகிறோம், அர்ச்சனை பண்ணுகிறோம்.!’ என்று பட்டர்கள் சுந்தரபாண்டியனுக்காகச் சொன்னார்கள். அந்த அர்ச்சனை இன்றைக்கும் நடக்கிறது.

நான்கணா கொடுத்தாலே இந்த அய்யர் அர்ச்சனை பண்ணுவான். மலைபோல் இந்த செல்வத்தைக் கொடுத்துவிட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்றான்.

நான் சொல்லுவதெல்லாம் கதை அல்ல. ஏதோ தொலைக்காட்சியில் வருகின்ற தொடர் இல்லை. எல்லாமே கல்வெட்டில் இருக்கிறது.

சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது

யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம். ஆதாரம் இல்லாமல் நாங்கள் யாரும் இந்த மேடையில் பேசமாட்டோம்.

அடுத்தாற் போல 50, 60 ஆண்டுகளில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு சித்திராபவுர்ணமி நிகழ்ச்சிக்கு சீரங்கத்திலிருந்து பெருமாள் கொள்ளிடத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

சித்திரைத் திருவிழா நடக்கிறது. அந்த நேரம் டில்லியில் முகமது பின் துக்ளக் என்ன பண்ணுகிறான்.? அவனுடைய படைகளை அனுப்பி வைக்கிறான். அவனுடைய தளபதி தலைமையில் ஒரு படை வருகிறது.

கொள்ளிடம் வரை வருகிறது. இவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்தப் பட்டருக்கு அங்கே இருப்போமா, திருவிழா நடத்துவோமா, இல்லை கோவிலுக்குத் திரும்பிப் போவோமா என்று ஒரு யோசனை.

கடைசியில் பெருமாளிடமே கேட்போம் என்று சொல்லிவிட்டு சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். இந்த மாதிரி முகமதியர் படை வருகிறது. நாங்கள் இங்கேயே இருந்து திருவிழா நடத்தலாமா.? இல்லை போய்விடலாமா? என்று சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்தார்கள்.

ஒரு பார்ப்பன சிறுமியைக் கூப்பிட்டு சீட்டை எடுக்கச் சொன்னார்கள். எடுத்துக் கொடுத்தது இந்த மாதிரி. ‘முகமதியர் படை வராது. நீங்கள் இங்கேயே இருந்து திருவிழாவை நடத்துங்கள் என்று சீட்டில் எழுதப்பட்டிருந்தது.!’.

இவர்கள் எல்லாம் அதற்குப் பிறகு திருவிழாவை மகிழ்ச்சியாக நடத்துகிறார்கள். ஆனால் என்ன தப்பு நடந்து போச்சுன்னா பெருமாள் எடுத்துக்கொடுத்த சீட்டு முஸ்லிம் படைத்தளபதிக்குத் தெரியாமல் போய்விட்டது.

அவன் அங்கிருந்து படை எடுத்து வந்துவிட்டான். கொள்ளிடக்கரைக்கு வந்தார்கள் என்று தெரிந்த பின்னாலே இவர்கள் அந்த சாமி சிலையைத் தூக்கிக்கொண்டு சீறீரங்கம் கோவிலுக்கு ஓடிப் போய்விட்டார்கள்.

பிறகு அந்தப் படை சீறீரங்கம் கோவிலுக்குச் சென்று சூறையாடினார்கள். அதற்கப்புறம் ரெங்கநாதர் ஓடினார், ஓடினார், ஓடிக்கொண்டேயிருந்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பத்தூர் என்ற ஊருக்குப் போனார்.

பிறகு அங்கேயிருந்து திருவனந்தபுரம், அதற்கப்புறம் திருமலை திருப்பதியில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டார். ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு ரங்கநாத பெருமாள் கோவிலிலேயே இல்லை. காணாமல் வெளியே போய்விட்டார். அதுதான் அவருடைய சக்தி.

இவ்வாறு பேராசிரியர் அ.இராமசாமி பேசினார்.



No comments:

Post a Comment