Pages

Wednesday, 16 March 2016

சாதி மயிர் -கவிதை



சாதி மயிர்
____________


வெட்டியவனும் இந்து
வெட்டுப்பட்டவனும் இந்து...
"அதானாலென்ன
வாயை மூடிக்கொள்
நாமெல்லாம் ஒரே மதம்".

வெட்டியவனும் தமிழன்
வெட்டுப்பட்டவனும் தமிழன்...
"அதனாலென்ன
கண்ணை மூடிக்கொள்
நாமெல்லாம் ஒரே இனம்".

இஸ்லாமியனுக்கு எதிராய்
தீக்கொளுத்த வேண்டுமா?
வெட்டியவனையும்
வெட்டுப்பட்டவனையும்
ஒன்றாய் உசுப்பி விடு ...
"இந்துவே எழுந்துவா".

தெலுங்கனுக்கு எதிராய்
கொம்புசீவ வேண்டுமா?
வெட்டியவனையும்
வெட்டுப்பட்டவனையும்
ஒன்றாய் சீண்டி விடு ...
"தமிழனமே பொங்கி எழு".

உசுப்பேற்றும் போது
"இந்துவாக இரு"
சீண்டிவிடும் போது
"தமிழனாய் இரு"
மற்ற நேரம்
"சேரியில் இரு".

இந்துவோடு இந்துவாய்
கலக்கலாம் என்கிறாய்...
தமிழனோடு தமிழனாய்
கலக்கலாம் என்கிறாய்...
மனிதரோடு மனிதராய்
கலந்து வாழ்ந்தால்
அரிவாள் எடுக்கிறாய்.

'ஆண்ட பரம்பரைகளின்'
சாதி மயிர்
ஆண்குறியில்தான்
இருக்குமென்றால்
வெட்ட வேண்டியது
தலையை அல்ல...
மயிரை.

---தோழர் வெண்புறா சரவணன்

No comments:

Post a Comment