"விடுதலை'யில் ஆரியர் பற்றிய செய்தியும், அரசும்-சென்னை அரசு
போஸ்டர் வாபஸ் பெற்றமையும்.’’
தம்பி!
ஆரியரை
நடுத்தெருவில் நாள் முழுதும் போட்டு உதைத்தாலும் கேட்பதற்கு இன்று நாதி கிடையாது!
என்ன
அண்ணா! இப்படி ஒரே போடு போடுகிறோயே! இவ்விதமெல்லாம் கூறும் வழக்கமோ-கருதும்
சுபாவமோ கிடையாதே, என்ன காரணம் இவ்வளவு மோசமான நடையிலே பேச, என்று
கேட்கத் தோன்றுகிறதல்லவா, உனக்கு.
பலே! பலே!
இது ரோஷமான பேச்சு! இது வீரனின் முழக்கம்! இவ்விதம் பேசினால்தான் பிரச்சினை
தீருமே தவிர, மயிலே
மயிலே இறகு போடு என்றால் போடுமா? என்று கேட்டுக் களிப்பால்
துள்ளிக் குதிப்போரும் இருக்கிறார்கள்.
தம்பி! நீ
கலக்கமடையவும் காரணமில்லை, அவர்கள் களிப்படையவும் தேவையில்லை. ஏனெனில், ஆரியரை
நடுத் தெருவில் நாளெல்லாம் போட்டு அடித்தாலும் இன்று கேட்பதற்கு நாதி இல்லை என்ற
மணிவாசகம் என்னுடையது அல்ல! "விடுதலை'யில் வெளிவந்த வீர
முழக்கம் அது; 28-9-55-ல்!!
அக்ரகாரங்கள்
இந்த வீராவேச உரை கண்டதும் இடி கண்ட நாகமாக வேண்டுமென்று எண்ணினாரோ, அல்லது படை வீரர்களுக்குச்
சிறிதளவு உணர்ச்சிப் பானம் கிடைக்கட்டும்-242 தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள் தொகுதி ஒன்று 243 என்று கருதினாரோ, எதற்காக இவ்விதம் தீட்டினாரோ, நானறியேன் - ஆனால்
ஆரிய இனத்தை நடுவீதியில் போட்டு அடித்தாலும் ஏன் என்ற கேட்க நாதி இல்லை என்று
எழுதியவருடைய "கைவலி' தீருவதற்கு முன்பே, நாடாளும் காங்கிரஸ் தலைவர்கள், ஆரியரின் முகம்
சிறிதளவு சுளித்துவிடுகிறது என்று தெரிந்ததும், நடு
நடுங்கிப் போகிறார்கள் எனும் உண்மை, இப்போது தெரிகிறது.
வீரம்
தேவை - நிச்சயமாக!
போர்
முழக்கம் வேண்டும் அவ்வப்போது உணர்ச்சியூட்ட!
உள்ள
நிலைமைக்குத் துளியும் பொருத்தமோ பொருளோ அற்ற வகையில், ஓங்காரக் கூச்சலிடுவது, சுவைக்கு உதவாது, என்பதை எடுத்துக்காட்டும் சம்பவம்
ஒன்று நடை பெற்றிருக்கிறது.
ஆரியர் -
சமூகத்திலே அனைவராலும் வெறுத்து ஒதுக்கித் தள்ளி விடப்பட்டது போலவும், கள்ளர், கயவர், கை ஏந்தி நிற்போர், ஆகியோர்
எவ்வண்ணம் காரி உமிழப்பட்டும், கண்டோரால் ஏசப்பட்டும், கடிந்துரைக்கப்பட்டும், தாழ்நிலை அடைவரோ, அதுபோல ஆரியரின் நிலை ஆகிவிட்டது போலவும், அவர்களை
எவ்வளவு கேவலமாக நடத்தினாலும் அடித்து விரட்டினாலும், ஏனென்று
கேட்க ஒருவரும் இல்லை என்று கூறத்தக்க அளவுக்கு, ஆரியரை
அன்னியர், அக்ரமக்காரர், அகற்றப்பட
வேண்டியவர்கள், விரட்டப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்குச்
சமூகத்தில் பெரும்பகுதியினர், அல்லது குறிப்பிடத்தக்க
அளவினர் வந்துவிட்டது போலவும் எண்ணிக் கொண்டு, "ஆரியரை
நடுத்தெருவில் நாள் முழுவதும் போட்டு அடி அடி என்று அடித்தாலும் ஏன் என்று
கேட்பதற்கு நாதி இல்லை' என்று தீட்டுகிறார். தீ! தீ! தீ!
என்று மும்முறை சொன்னதும் எந்தத் திக்கு நோக்கி கூறுகிறாரோ, அது பற்றி எரிந்து போகும் என்று எண்ணிடும் இயல்புடையவர்.
"விடுதலை'யில் இந்த மணிவாசகம் வெளிவந்ததினாலேயே, இது
பெரியாரின் கருத்து என்று கொண்டு விடுவதற்கில்லை. ஏனெனில், பெரியார்
"விடுதலை'யிலேயே எனக்கு விருப்பமில்லாத கருத்துகள் சில
வேளைகளிலே வந்து விடுகின்றன, அவைகளை என் கருத்துக்கள் என்று
நம்பி விடாதீர்கள். என் கையெழுத்திட்டு வெளிவரும் தலையங்கத்தில் காணப்படும்
கருத்துத்தான் என் கருத்து, என்பதாகக் கூறியிருக்கிறார்.
எனவே ஆரியரை நடுவீதியில் போட்டு உதைத்தாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை
என்ற அருமையான கண்டு பிடிப்புப் பெரியாருடையது என்று கூறுவதற்கில்லை! பெரியார்
ஸ்தானத்தை வேகமாக எட்டிப் பிடித்திடுவதாகக் கொட்டாவி விடும் குணளர் அவ்விதம்
கருதக் கூடும்!!
திரிலோகமும்
புகழும் சுந்தரன்!
தீரன்!
வீரன்! கெம்பீரன்! உதாரன்!
என்று
நள்ளிரவில் நாலுவீதி கேட்கும்படி உரத்தகுரலில் பாடிவிடுபவன், போர்க்களத்தில் பெற்ற
அரிய அனுபவத்தினால் அவ்விதம் பாடுகிறான் என்று பொருள் கொள்வார் உண்டா! அதுபோல, வீரமூட்ட, இதுபோல ஆரியராவது மண்ணாங் கட்டியாவது!
நடுவீதியில் அடித்தாலும் கேட்க நாதி ஏது என்று பேசுவதன்மூலம், சமூகத்தில் தன்னம்பிக்கை அற்று, தாசர் நிலைபெற்று, எடுப்பார் கைப்பிள்ளையாய், ஏவல்புரிபவராய், எடுபிடியாய்க் கிடப்பவர்களின் உள்ளத்தில் வீரம் முளைத்திடச் செய்யலாம்
என்பதற்காகக் கூறி இருக்கக் கூடும். அல்லது, ஆரியர்
உண்மையிலேயே பெற்றிருக்கும் செல்வாக்கும் வலிவும் வளருவது கண்டு அச்சப்பட்டு, வீரதீரமாகப் பேசி அந்த அச்சத்தை மறைத்துக் கொள்வதற்கும் இந்த முறை
கையாளப் பட்டிருக்கக்கூடும்; இவ்விதமாகக்கூட இல்லாமல், ஏதோ இன்றைய "அயிடம்' அது, காரசாரமாக இருக்கிறதா இல்லையா பார்த்துக்கொள் என்ற போக்கிலே
எழுதப்பட்டுமிருக்கலாம்; எக்காரணம் கொண்டு
எழுதப்பட்டிருந்தாலும், நாடாளும் காங்கிரஸ் தலைவர்களுடைய
போக்கைக் கவனிக்கும்போது, இந்த வீராவேசப் பேச்சுத்
துளியும் பொருந்துவதாகக் காணோம்.
நாதியில்லை!
என்று துந்துபி முழக்கம் கேட்கிறது! ஆரியர் தாக்கப்பட்டாலும் கேட்க நாதி இல்லை
என்று முழக்கமிடும் நேரத்தில், "சென்னை ராஜ்ய சர்க்கார்' என்ன செய்கிறது, தம்பி! கவனித்தாயா? ஆரியரின் மனதிலே ஒரு துளி
சஞ்சலம், முகத்திலே ஒரு சிறு கோபக்குறி, பேச்சிலே ஒரு விதமான வருத்தம் தெரிந்ததும், கிடுகிடுவென
ஆடி முகத்தைத் துடைக்கவும், முகமன் கூறவும், ஐயா! வருந்தற்க! பிழை பொறுத்திடுக! தவறு ஏற்பட்டிருந்தால், எடுத்து இயம்பிடுக! ஏற்ற முறையில் கழுவாய் தேடிக்கொள்ளக் காத்துக்
கிடக்கிறோம்! உமது உள்ளத்தில் ஒரு துளி வேதனை தோன்றினாலும் உலகம் தாங்காதே!
கோபம் கொண்டு ஐயன்மீர்! எம்மீது சாபத்தை வீசாதீர்! சரணம் ஐயா! சரணம்!- என்ற
கெஞ்சிக் கூத்தாட முன் வருகிறது. விடுதலையார் கூறுகிறார் வீதியில் போட்டு
அடித்தாலும் ஆரியருக்காகப் பரிந்து பேச நாதி இல்லை என்று நாடாளும் தலைவர்களோ, நான், நீ, என்று போட்டி
போட்டுக் கொண்டு முன் வருகிறார்கள், ஆரியரின் முகக்
கோணலைப் போக்க; மனவருத்தத்தை நீக்க!!
ஆரியர், அடித்து ஒழிக்கப்பட
வேண்டியவர்கள் என்று சமூகமே முடிவு கட்டிவிட்டது என்ற பொருள்பட அன்பர்
எழுதுகிறார்; அவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான
தலைவர்களோ, தாசானுதாசர்'களாகி, ஆரியரின் தயவுக்குத் தவம் கிடக்கும் போக்கினராக உள்ளனர்!
காரணம் காட்டாமல்
நண்பர் "காரசாரமாக' எழுதிவிட வில்லை; காரணம் காட்டுகிறார், நம்பிக்கையுடன். ஆரியரை நடுத்தெருவில் போட்டு அடித்தாலும் ஏன்
என்றுகேட்க நாதி இல்லை என்கிறார், ஏன் என்ற காரணமும்
கூறுகிறார்.
ஆரியர்
செத்த பாம்புகளாகி விட்டனர்!
பாம்பு
உயிரோடு இல்லை, எனவே, அதைப் போட்டு அடிப்பதால் ஆபத்து இல்லை!!
அந்தத்
"துணிவு' கொண்டு
அடிக்கும் வீரனை, ஏன் என்று யார் கேட்கப் போகிறார்கள் -
கேட்க மாட்டார்கள்!
ஆனால், செத்த பாம்பை யாரும்
அடிக்க மாட்டார்கள்!
கூட்டுக்கோல்கொண்டு
குப்பை மேட்டில் தள்ளுவர்; குப்பை குளம் போட்டுக் கொளுத்துவர்! பிரத்யேகமான இயல்பு படைத்த வீரர்
தான் "செத்த பாம்பு' கண்டதும் அடிப்பார்!
ஆரியர்
செத்த பாம்பு ஆகிவிட்டனர் - அதாவது செல்வாக்கு படுசூரணமாகிவிட்டது - எனவே அவர்களை
எப்படித் தாக்கினாலும் ஏன் என்று கேட்க "நாதி' இல்லை, என்று
எழுதி, மகிழ்கிறார்.
ஆரியர் செத்த
பாம்பானது எப்படி?
அதற்கும்
காரணம் காட்டுகிறார் - ஆரியர்களின் அட்டகாசம் பல நூற்றாண்டுகளாக இங்க எல்லை மீறிய
நிலையிலிருந்தது. ஆனால் சு.ம. இயக்கத்துக்குப் பிறகு இவர்கள் செத்த பாம்புகளாகி
விட்டனர்!
படித்து, வீரஉணர்ச்சி பெறச்
சொன்னார்களா, பிரித்துப் பிரித்து விளக்கமும் பொருத்தமும்
பார்க்கச் சொன்னார்களா! அதிலும் நான் எழுதுவதை!! - என்று அந்த சோர்விலாச்
சொற்போர்க்கோமான் கோபத்துடன் கூறக்கூடும் - நமக்கு அப்படி ஒரு பழக்கத்தைப்
பெரியார் ஏற்படுத்திவிட்டதாலே இந்தத் தொல்லை - யார் கூறினாலும், பொருள் இருக்கிறதா, பொருத்தம் இருக்கிறதா, முன் பின் சொன்னதற்கு முரணாகாமல் இருக்கிறதா, மூலக்
கருத்தினைக் கெடுத்திடாத வகையில் அமைந்திருக்கிறதா, என்றெல்லாம்
பார்க்கச் சொல்கிறது! இடி ஓசை கேட்கும்போது, ஆதிதாளமா, ரூபகமா என்று யாரும் ஆராய வேண்டியதில்லை. ஆனால் மன்றத்தில் அமர்ந்து, இசைபாடும்போது, தாளம் சரியாக இருக்க வேண்டும்
என்று தானே யாரும் எதிர்பார்ப்பார்கள் - அந்த முறையிலே, நான்
பார்க்கிறேன், தம்பி, வேறென்ன!
ஆரியருக்கு
நாதி இல்லை, - இந்தப் பேருண்மையை நாட்டுக்கு அளிக்கிறார்.
நாதி
இல்லை என்பதை விளக்க உதாரணம் தருகிறார், ஆரியரை அடித்தாலும் கேட்க ஆள் இல்லை - என்று
கூறுகிறார்.
சந்து
முனையில், இருட்டு வேளையில், ஒண்டி சண்டியாக வரும் ஆரியரை அடித்துவிட்டு ஓடிவிடும் அற்ப காரியத்தை
அல்ல அவர் கூறுவது, வாசகத்தைக் கவனி, தம்பி!
நடுத்தெருவில்
நாள் முழுதும் போட்டு உதைத்தாலும் கேட்பதற்கு இன்று நாதி கிடையாது!
நாள்
முழுதும்!
இதற்குக்
காரணம், ஆரியர் செத்த பாம்பு ஆனது!
ஆரியர்
செத்தபாம்பு ஆனதற்குக் காரணம், சு.ம. இயக்கம்!
சரி!
தம்பி! இப்படி வாதம் நடத்திப்பார். சு.ம. இயக்கத்தின் பலனாக ஆரியர் செத்தபாம்பு
ஆகி விட்டார்களென்றால், செத்தபாம்பை அடிக்கக் கிளம்புவானேன். நடுத்தெருவில், நாள் முழுவதும் செத்தபாம்பைப் போட்டு அடித்துக் கொண்டு கிடப்பானேன்!
கோபத்தால்
ஒரு தாவு தாவுவார் நண்பர், இவ்விதம் வாதாடினால். எனவே அவருக்கு அல்லல் வேண்டாம், அந்த வாதத்தை இந்த அளவுடன் நிறுத்திக்கொள்வோம்.
நாதி
இல்லை என்கிறாரே, அது பொருந்துகிறதா, என்று இந்தக் கிழமை சட்டசபை
நடவடிக்கையைப் படித்துவிட்டு எனக்குக் கூறு தம்பி!
நடுத்தெருவில்
நாள் முழுவதும் அடித்தாலும், கேட்க நாதி இல்லை என்று அரிய உண்மையை, செயல்மூலம் செய்து காட்டிடும், அரும்பெரும்
காரியத்தை அவர்கள் செய்யவிட்டு விடு - அவர்களுக்கே அந்த ஏகபோக உரிமை
இருக்கட்டும்!
ஆரியரை
இப்போது யாரும் அடிக்கவில்லை! சர்க்கார் சில பிரச்சாரத் தாட்களை அச்சடித்தனர்.
நாதி இல்லை! நண்பரின் திருவாக்கல்லவா இது! சர்க்கார், அச்சடித்தார்கள், ஆரியர் எச்சரித்தார்கள்; சர்க்கார் அச்சடித்ததை
அழித்தொழித்தார்கள்.
நடுவீதியில்
நாளெல்லாம் போட்டு அடித்தாலும் கேட்பதற்கு நாதி இல்லா நிலைக்கு இது
எடுத்துக்காட்டா, தம்பி! எண்ணிப்பார்!
தீண்டாமை
ஒழிப்பு சர்க்கார் திட்டத்திலே ஒன்று - மிக முக்கியமானதும் கூட! அரசியல் சட்டம்
இதை வலியுறுத்துகிறது. நாட்டு மக்களுக்கு இதை எடுத்துக்காட்டி, நல்லறிவுச் சுடர் கொளுத்த, அரிஜன இலாகாவின் மூலம், சர்க்கார், பிரசாரத் தாட்கள் வெளியிட்டு, நாடெங்கும்
அனுப்பினர். தம்பி! சர்க்கார் வெளியிட்டதை அநேகமாக நீ கண்டிருக்கமாட்டாய், நமது கழகம் அதுபோல அச்சிட்டு அனுப்பியது கண்டிருப்பாய்! இப்போதும் ஒரு
முறை, அதைப் பார், தம்பி! அதிலே, ஆரியரை இழிவுபடுத்துவது என்ன காண்கிறோம்!!
மோட்சலோகம்
என்று புரட்டுப் பேசி என்னிடம் பறித்த பொருளை மூட்டை கட்டிக்கொண்டு போகிறாயா, முழு மோசக்காரா! இறக்கு
மூட்டையை! எடு ஓட்டம்!! என்று கேட்டு, ஒரு சிறு கூட்டம், ஆரியனை அடித்து விரட்டுவது போலப் "போஸ்டர்' அல்ல
அது.
ஐயா!
உலகோரே! உங்கள் நாட்டிலெல்லாம் இல்லாத ஒரு அதிசயம் காணீர் இதோ இவன், பிரமனின் முகத்தில்
பிறந்தவன்! என்று கூறி, ஆரியரை, மற்ற
நாட்டவரிடம் காட்ட, அவர்கள் கைக் கொட்டிச் சிரித்து, மடத்தன மிக்கவனே! அப்படியா கூறினாய்? என்று
கேட்டுக் கேலி செய்வது போன்ற, பிரசார போஸ்டர் அல்ல!
பிச்சைக்காரன்
கோலம், பெருந்திண்டிக்காரன்
கோலம் காட்டிடும் போஸ்டர்கூட அல்ல!
தீண்டாதவனை, தொடாதே என்று கூறும், வைதீகன் சர்க்கார் சட்டப்படி, சிறையில்
தள்ளப்படுகிறான் என்பதை விளக்கும் போஸ்டர்!
இது, ஆரியருக்கு ஆத்திர
மூட்டிவிட்டது! செத்த பாம்பு, படமெடுத்தாடிற்று!
சென்னை
சர்க்கார், "நாக பூஜை' செய்து, "சினம் விடுக!
பிழை பொறுத்திடுக' என்று கெஞ்சுகிறது!
டால்மியாபுரம், கல்லக்குடி
ஆக்கப்படவேண்டும் என்பதற்கான கிளர்ச்சி, பொதுமக்களிடம் பரவி
இருந்ததுபோல,
இரயில்வே
ஸ்டேஷன் போர்டுகளில் இந்தி ஆதிக்க மொழி இருப்பது அக்ரமம், அதனை அழித்திட வேண்டும்
என்பதற்கான கிளர்ச்சி நாட்டில் வலிவுடன் வடிவெடுத்ததுபோல,
தமிழரின்
எல்லையைப் பிற மொழியாளர் பறித்திடும் அக்ரமத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற
கிளர்ச்சி, நல்லோர்
உள்ளத்தை எல்லாம் தொட்டு, நாட்டிலே நல்ல நிலை அடைந்தது போல,
ஆஹா!
ஆரியரை இங்ஙனம் அவமதிப்பதா, அரசாங்கம் இந்த அக்ரமத்துக்கு இடம் தருவதா, என்று
கோபித்துக் கொதித்தெழுந்து பொதுமக்கள் கேட்டனரா, என்றால்
இல்லை!
பார்ப்பனர்கள்
சிலர் - அதிலும், சர். சி. பி. இராமசாமி ஐயர், இராமசாமி சாஸ்திரிகள், இராஜகோபாலாச்சாரியார், அனந்தராமகிருஷ்ண ஐயர், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, வி.டி. இரங்கசாமி ஐயங்கார்
போன்ற பிரபலஸ்தர்கள்கூட அல்ல; சிலர் கூடினர், சீறிப்பேசினர், திருச்சியில் நகர்ச்சதுக்கத்தில் -
"இந்து' ஒரு குட்டித் தலையங்கம் தீட்டிற்று.
அவ்வளவுதான்! சர்க்கார், சத்தம் வரும் திக்கு நோக்கிச்
சரணம்! சரணம்!! என்று கூவுகிறது!!
துக்க
தினம் கொண்டாடுவோம் - இந்த போஸ்டர் எமது மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது -
உடனே வாபஸ் பெறுக - என்று செத்த பாம்புகள்' கூறின. உடனே, சகல கட்சிகளையும்
அணைத்துக்கொள்ளும் சரசாங்கிச் சர்க்கார், அடியற்ற
நெடும்பனையாகிறது!
நாதி
இல்லை!
பார்த்தாயா
தம்பி, நாதி, யாருக்கு இல்லை என்பதை!!
30,125
போஸ்டர்கள் அச்சிட்டனர், 5000 ரூபாய்
செலவிட்டனர். ஆரியர் ஒரு சிறு கண்டனம் கிளப்பினர், அவ்வளவுதான், சர்க்கார், பாய் சுருட்டிக்கொண்டது! இந்த
நிலைமைக்கு என்ன பெயர்? நாதி இல்லை என்பதா!
பார்ப்பனரின்
மனம் புண்படக் கூடாது என்று சர்க்கார் கருதுவதுகூட ஆச்சரியமல்ல, உமது மனம் புண்படும்படி
அந்த போஸ்டர் இல்லையே என்று விளக்கம் கூறக்கூடச் சர்க்கார் அச்சப்படுகிறதே, அதுதான் உண்மையிலேயே ஆச்சரியம்.
தீண்டாமை
எனும் கொடுமை, ஆரிய
மார்க்கத்தின் விளைவு - ஆரிய மார்க்கத்தின் பாதுகாவலர் ஆரியர். ஆகவேதான் ஆரிய
உருவம் பொறித்தோம் - இதை ஆட்சேபித்துப் பேசுவது அறிவற்ற செயலாகும். சர்க்கார்
இத்தகைய அறிவற்ற செயலை மதிக்காது, தன் திட்டத்தை
மாற்றிக்கொள்ளாது என்று எடுத்துரைக்கும் ஆண்மையாளர் அங்கே காணோம் - நடுவீதியில்
போட்டும் அடித்தாலும் கேட்க நாதி இல்லை என்று பேசும் வீரம் இங்கே இருக்கிறது, ஏட்டில்! அந்த ஏடு, ஆட்சிக்குக் கேடயம்' ஆகி மகிழ்கிறது! தம்பி! ஆரியர் கைகொட்டிச் சிரித்திட இதைவிட வேறு என்ன
வேண்டும்?
வைதீகர்கள்
தீண்டாமையை ஆதரிக்கிறார்கள்; அவர்களுக்குச் சட்டத்தை நினைவுபடுத்தவே, இந்தப் போஸ்டர், இதிலே பொறிக்கப்பட்டுள்ள உருவம், பார்ப்பனருடையது என்று பார்ப்பனர் ஏன் கருதவேண்டும்?
தோழர்
விநாயகம் M.L.A.
இதைக் கேட்டார் - அந்த நேர்மையை நான் பாராட்டுகிறேன்.
உச்சிக்
குடுமியும் பூணூலும் பார்ப்பனருக்கு மட்டும்தானா, வன்னியகுல க்ஷத்திரியரிலே
சிலருக்கு இல்லையா? ஆசாரி குலத்திலே இல்லையா? என்று தோழர் விநாயகம் எடுத்துக் கேட்டதுடன், சர்க்கார்
இந்த எதிர்ப்புக்கு மறுப்பளிக்காமல், முதுகெலும்பற்ற
முறையில், நடந்து கொண்டதை இடித் துரைத்தார். அவர் எடுத்துக்
காட்டியபடி, "உச்சிக் குடுமியும் பூணூலும்'' ஆரியரல்லாதவர்களிடமும் இருந்திடக் காண்கிறோம் - பொதுவாக, பண்டைப் பெருமையும் இந்து மத மாண்பும், உச்சிக்
குடுமி பூணூல், மடிசஞ்சி போன்ற கோலத்தில் இருப்பதாகக்
கருதுபவர்கள், ஆரியக் கோலத்தில் உள்ள திராவிடர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள். போஸ்டர், பார்ப்பனரைக்
குறிப்பிட்டு அல்ல, வைதீகத்தைக் குறிப்பதாக இருக்கிறது என்று
சர்க்கார் விளக்கம் அளித்திருக்கலாம் - ஆனால் முதுகெலும்பு இல்லை, முப்புரியினரின் கோபத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லை; எனவே சரணாகதி அடைகிறது!
தம்பி!
இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பார்ப்பன ரல்லாதாருக்கு "வேலைகள்' கொடுத்ததாம் இந்தச்
சர்க்கார் - இதற்கே வெண்சாமரம் வீசுகிறோம் என்கிறார்கள் - வேடிக்கை அதுகூட அல்ல, நாங்கள் ஏன் வெண்சாமரம் வீசுகிறோம் தெரியுமா. நீ வெண்சாமரம் வீசலாம்
என்று எண்ணுகிறாய், உனக்கு அந்த இடம் தரக்கூடாது, என்பதற்காகவே நாங்கள் வெண்சாமரம் வீசுகிறோம் என்று வாதாடுகிறார்களே, அதுதான் வேடிக்கை போகட்டும் வலி எடுக்கும் வரையில் வீசட்டும். ஆனால்
ஒன்று! பார்ப்பனரல்லாதாருக்கு வேலைகள் கொடுத்து விடுவதால், ஆரிய
ஆதிக்கத்தை ஒழித்துவிடமுடியுமென்றால், அந்தத் திட்டத்தை
மட்டுமே மலை என நம்பிவந்த ஜஸ்டிஸ் கட்சி போதுமென்று இருந்துவிட்டிருக்கலாமே!
ஆரிய
ஆதிக்கம் என்பது அவ்வளவு எளிதாக, சிலபதவிகளைப் பார்ப்பனரல்லாதார் பெறுவதன் மூலமாக
மட்டுமே போகக்கூடியதுமல்ல, ஆரியரை அடித்து விரட்டுவோம், நடு வீதியில் நாள் முழுதும் அடித்தாலும் கேட்க நாதி கிடையாது என்று
பேசிவிடுவதால் போகக்கூடியதுமல்ல.
ஆரியர்
ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், ஆரியம், ஆரியரிடம்
மட்டுமல்லாமல், திராவிடச் சமுதாயத்தினரிடம் இன்னும்
பெருமளவுக்கு இருப்பதனாலும் ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆள வந்தார்கள்
இருப்பதினாலும்தான். எனவேதான் தம்பி! நமது கழகம், ஆரியரை
ஒழித்திடும் வேலையை அல்ல, ஆரியத்தை ஒழித்திடும் வேலையில
ஈடுபடுகிறது! இது ஆரியரை ஆதரிக்கும் அற்பத்தனம் என்று கூறுவோர், நாம் மனித உருவம் பெற்றிருப்பதே சகிக்க முடியாத அக்ரமம் என்ற அளவுக்குத்
"துவேஷம்' கொண்டவர்கள்.
ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும்
இல்லை, அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும்
இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சிகளிடம் இருக்கிறது, நாயுடுகளிடம்
இருக்கிறது; ஏன் காமராஜரின் நாடார் சமூகத்தில் கூட பழமை
விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம். எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது
திட்ட மாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக்கிறது.
இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை
கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம்.
ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத்தப்பட்டிருக்கிறது; அதைப்
புகுத்தி, பாதுகாத்துவரும் பணியில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும்கூட ஈடுபடக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான்
முறையே தவிர அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம்.
"போஸ்டர்
விஷயத்திலே, "சர்க்கார்' இந்த அளவுக்கு ஆரியரிடம் அச்சப்பட்டு அடிபணிகிறது என்றால், அக்ரகாரத்தைக் கொளுத்த பெட்ரோல் டின்கள் வாங்கித்தரும் என்று
எதிர்பார்த்தா, அதற்குச் சாமரம் வீசிக்கொண்டு கிடப்பது!
தமிழரிடம் பற்றும் பரிவும் கொண்ட ஒரு சர்க்காருக்காக நாம் தவம் கிடந்தது கண்டு
காலதேவன் கருணைகொண்டு, காமராஜர் சர்க்காரை நமக்கு அருளி
இருப்பதுபோலவும், இந்தச் சர்க்காருடைய சக்தியைத் துணைகொண்டு, ஆரியரை ஒழித்திடும் காரியத்தைக் கூடச் சாதித்துக் கொள்ளலாமென்றும்
பகற்கனவு காண்போருக்கு, இந்த சர்க்காரும் ஏனைய சர்க்கார்
போலவே ஆரியருக்கு அடிபணியும் சர்க்கார்தான் என்பதைச் சென்ற கிழமை சட்டசபைப்
பேச்சு எடுத்துக் காட்டுகிறது.
எனவே
தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித் தொழிக்க வேண்டும் - அந்த ஆரியம் அக்ரகாரத்தில்
மட்டுமில்லை!
எட்டிப்
போடா சூத்திரப் பயலே! - என்று ஐயர் பேச்சும் ஆரியம்தான்!
கிட்டே
வராதே சேரிப் பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்!
படையாச்சிக்கு
இவ்வளவு உயர்வா? என்று
கேட்கும் பேச்சும் ஆரியந்தான்!
மறவர்
முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்!
நாடார்
அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! - என்று ஆரியம், பலப்பல முறைகளிலே
தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல
முறைகளில்!
ஆரியம், ஒரே இடத்தில், ஒரே கூட்டத்தாரிடம், ஒரே முறையில் இருக்குமானால், அந்த ஒரு இடத்தை, ஒரு கூட்டத்தை, ஹிட்லர், யூதர்களை விரட்டினானே, அதுபோலச் செய்துவிடவேண்டும் என்று பேசுவது, ஓரளவுக்காவது
பொருத்தமானதாகத் தெரியக்கூடும். ஆனால், ஆரியம், இருக்கும் இடம், அக்ரகாரம் மட்டுமல்ல!
பாரேன், தம்பி! ஆரிய ஆச்சாரியார்
விலகினார், திராவிடக் காமராஜர் வந்தார் என்று, "உருவம்' கண்டு உள்ளம்
பூரித்துக் கிடந்தது என்ன ஆயிற்று! ஆரியம் திராவிட உருவினர் ஆட்சியிலும்
இருந்துகொண்டு, வெற்றி! வெற்றி! என்று கொக்கரிக்கிறதே!
எனவே, நமது மணி தம்பி! அக்ரகாரத்தை
நோக்கிப் படை எடுத்து அதை "பஸ்மீகரம்' செய்துவிடப்
போவதாகக் கூறிவருவது அல்ல; ஆரியம் இருக்கும் இடம் எல்லாம்
அறிவு சுடர்கொளுத்தி அதன் மூலம், ஆரியத்தை ஒழிப்பது ஆகும்!
உடல்
படபடவென ஆடாது. உள்ளம் "கிடுகிடு' வெனக் குதிக்காது! பேச்சிலே, எள்ளும்
கொள்ளும் வெடிக்காதே!- இந்தத் திட்டத்தில் என்பார்கள் - ஆனால், வெற்றிக்கு வழி நாம், கொண்டிருப்பதுதான், அது இராயபுரத்து "அரை டஜன் சிறுவர்கள் தீட்டியதுமல்ல, பெரியார் தந்த திட்டம்!!
அன்புள்ள,
அண்ணாதுரை
9-10-1955
No comments:
Post a Comment